

ந.முருகவேல்
விருத்தாசலம்
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்க ளுக்கு சுகாதாரமான குடிநீரை உறுதி செய்யும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பள்ளி மேலாண்மைக் குழு அல்லது தொகுதி எம்எல்ஏ நிதியின் மூலம் அமைக்கப் பட்டுள்ளன. தற்போது பெரும்பாலான பள்ளிகளில் இந்த இயந்திரங்கள் பொருத் தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பெரும் பாலானவை பயன்பாட்டில் இல்லாதது வேதனை அளிப்பதாகும்.
விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஒன்றி யத்துக்கு உட்பட்ட தருசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் குறித்து மாண வர்களிடம் கேட்டபோது, “இந்த இயந்திரம் பொருத்தப்பட்ட நாளிலிருந்து அப்படியே தான் உள்ளது. அதில் நாங்கள் தண்ணீர் குடிப்பதில்லை. வழக்கம்போல வெளியில் உள்ள தொட்டியிலிருந்து வரும் தண்ணீரை தான் பருகி வருகிறோம்” என்றனர்.
அங்குள்ள ஆசிரியர்களிடம் விசாரித்த போது, “எம்எல்ஏ நிதியில் அமைக்கப்பட்டது. அவர்கள் வந்து வைத்தார்கள். ஆனால் அதில் தண்ணீர் வந்ததா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது” என்றனர்
இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கிறதே தவிர, அவை செயல்படுவதாக எந்தப் பள்ளி ஆசிரியரும் உறுதிசெய்யவில்லை என்கின்றனர் மாவட்டக் கல்வி அதிகாரிகள்.
இந்நிலையில் தமிழக அரசு மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கட்டண அடிப்படையில் வழங்கி வருகிறது. சில நகராட்சிகளில் 20 லிட்டர் ரூ.7-க்கும், மற்ற சில நகராட்சிகளில் ரூ.6-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு சுத்திகரிக்கப்படும் இயந்திரங்கள் பள்ளிகளில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களைச் சார்ந்தே உள்ளன.
விருத்தாசலம் நகராட்சியில் பெரியார் நகர் மற்றும் கல்லூரி நகரில் நகராட்சி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தொண்டு நிறுவன குடிநீர் சுத்திகரிப்பு விற்பனை நிலையத்தில் 20 லிட்டர் தண்ணீர் ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக விருத்தாசலம் நகராட்சி பொறியாளர் பாண்டுவிடம் கேட்டபோது, “நகராட்சி பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை இல்லை. அனைத்து குடியிருப்புகளுக்கும் தண்ணீர் முறையாக விநியோகிக்கப்ப டுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வேண்டுவோர் மட்டும் அந்த நிலையத்திற்கு சென்று கட்டண அடிப்படையில் தண்ணீர் பெற்றுக் கொள்ளலாம். ரூ.5 அந்த நிறுவனத்திற்கும், நகராட்சிக்கு ஒரு ரூபாயும் வழங்க வேண்டும் என்ற 10 வருட ஒப்பந்த அடிப்படையில் குடிநீர் விநியோகப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் இதே விலைக்குத் தான் விற்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால் அவர்கள் எவ்வளவு நீர் தினசரி பயன்படுத்த வேண்டும் என்ற அளவீடு எதவும் இல்லை” என்றார்.
இதுதொடர்பாக கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பின் செயலாளர் மருதவாணனிடம் கேட்டபோது, “தண்ணீர் வாழ்க்கைக்கான அத்தியாவசிய மானது. அவற்றை படிப்படியாக தனியார் மயமாக்கும் வேலை தான் இது. அரசு ஒரு நபருக்கு 147 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் அதை அரசால் செய்ய முடியவில்லை. மாறாக தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. இதன்மூலம் தண்ணீர் விற்பனை நிறுவனங்கள் அதிகரிக்கும். தற்போது சாலைப் பணிகள் எப்படி தனியார் வசம் சென்றதோ, அதேபோல் தான் நாளை தண்ணீரும் தனியார் வசம் செல்லும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீருக்கான இயந்திரம் பொருத்தப்பட்டும் அது பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் பொதுமக்களிடம் தண்ணீரை விற்பனை செய்து பணம் பார்க்குமிடத்தில் மட்டும் சுத்தகரிப்பு இயந்திரம் இயங்குகிறது எனும்போது, அரசின் நிலை எப்படி உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை” என்றார்.