

நாமக்கல்
மோகனூர் அருகே தாயும், மகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோகனூர் அருகே நெய்க் காரன்பட்டி வழியாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் இரு பெண்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தனர். தகவல் அறிந்த நாமக்கல் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மோகனூர் அருகே உள்ள பரளி ஊராட்சி ஒத்தையன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கண்ணையன் மனைவி கண்ணகி (36), அவரது மகள் அகல்யா (16) எனத் தெரியவந்தது.
குடும்ப பிரச்சினை காரணமாக கண்ணகி, அவரது மகள் அகல்யா ஆகியோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து நாமக்கல் ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அகல்யா அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.