Published : 05 Aug 2019 10:21 AM
Last Updated : 05 Aug 2019 10:21 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் மல்லிகை சாகுபடி: ராமேஸ்வரத்தில் இருந்து நாற்றுகள் கொள்முதல் அதிகரிப்பு

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி 

வறட்சியிலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் காத்து வருவதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மல்லிகை சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் இருகரையிலும் அமைந்துள்ள கிராமங்களில் விவசாயிகள் பலர் மல்லிகை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மை கொட்டாய், மலையாண்டஅள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை மலர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், போதிய மழையில்லாததால் நெல், மா சாகுபடியில் தொடர் இழப்பைச் சந்தித்து வந்த விவசாயிகள் பலர், நிகழாண்டில் மல்லிகை நாற்று நடவு செய்ய தங்களது நிலத்தை சீர் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் இருந்து மல்லிகை நாற்றுக்களை அதிகளவில் விவசாயிகள் வாங்கி வருகின்றனர்.

இதுதொடர்பாக குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மலர் விவசாயி பெரியண்ணன் கூறும்போது, ‘‘கத்தரி, தக்காளி பயிர்களில் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை. ஆனால், மல்லிகையைப் பொருத்தவரை, ஒரு முறை முதலீடு செய்து தொடர்ந்து பராமரித்து வந்தால் 20 ஆண்டுகள் பலன் கிடைக்கும். இதனால், கடந்த சில ஆண்டுகளில் மல்லிகை சாகுபடி பரப்பளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

மாசி, பங்குனி, சித்திரை, ஆவணி மாதங்களில் நல்ல விளைச்சல் இருக்கும். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் விளைச்சல் குறைவாக இருக்கும். இக்கால கட்டத்தில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகும்.

ஆட்கள் பற்றாக்குறை

இங்கு விளையும் மல்லிகைப் பூக்கள், சரக்கு வாகனங்களில் பெங்களூரு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப் படுகிறது. அங்கு ஏலம் முறையில் மல்லிகை விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலே போதுமானது. இதனால், வறட்சி காலத்திலும் மல்லிகை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க கைகொடுத்து வருகிறது. மல்லிகை மலர் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் பூச்சி மருந்துகள் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்க வேண்டும்.

கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணம் பகுதியை மையமாக கொண்டு வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார். இங்கு நடவு செய்யப்படும் மல்லிகை நாற்றுகள் ராமேஸ் வரத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 100 நாற்றுக்கள் கொண்ட ஒரு கட்டு ரூ.200-க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.300-ஆக விலை உயர்ந்துள்ளது.

சொட்டுநீர் பாசனம்

தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் மல்லிகைச் செடிகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்துக்கு அரசு மானியம் வழங்கினாலும், விவசாயிகள் தரப்பில் குறிப்பிட்ட தொகை செலவு செய்ய வேண்டி உள்ளது. எனவே, தற்போது உள்ள விலைக்கு ஏற்ப சொட்டுநீர் பாசனம் அமைக்க ஏற்படும் செலவுக்கான மானியம் வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும். சாகுபடி, கவாத்து உள்ளிட்ட பணிகளில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து தோட்டக் கலைத்துறை அலுவலர்கள், விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x