Published : 05 Aug 2019 10:12 AM
Last Updated : 05 Aug 2019 10:12 AM

மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 2 மாத குழந்தையுடன் தேனியில் இருந்து கோவைக்கு பறந்த ஆம்புலன்ஸ்: ஓட்டுநர்கள் ஒருங்கிணைப்பால் 215 கி.மீ. தொலைவை 3 மணி நேரத்தில் கடந்தது

தேனி

மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 2 மாத குழந்தையை தேனியில் இருந்து கோவைக்கு 2 மணி நேரம் 55 நிமிடங்களில் அழைத்துச் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகத்துக்கும், அவர்களுக்கு உதவிய மற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தசாமி. இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு 2 மாத ஆண் குழந்தை உள்ளது. தேனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் ஆர்த்தி இருந்தார்.

இந்நிலையில் குழந்தைக்கு கடந்த 29-ம் தேதி மூச்சுத் திணற லும், வலிப்பும் ஏற்பட்டுள்ளது. உட னடியாக தேனி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். எனினும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதையடுத்து குழந்தையை கோவையில் உள்ள குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் முடிவு செய்தனர். ஆனால், குழந்தைக்கு சுவாசக் கோளாறு கடுமையாக இருப்பதால் இன்குபேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்ஸில்தான் கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர் கள் அறிவுறுத்தினர்.

அதற்கான ஏற்பாடுகளை ஆர்த்தி யின் அண்ணன் ஸ்ரீகாந்த் செய்தார். இவர்களுக்கு சின்னமனூர் சின்னராமகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் சதீஷ்குமார் உதவ முன்வந்தார். இதையடுத்து, கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து இன்குபேட்டர் வசதியுடன் கூடிய சிறப்பு ஆம்புலன்ஸ் தேனி மருத்துவக் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டது.

கடந்த 31-ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸில், மலப்புரம் மாவட் டம் மனதுமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜாபர்அலி (31) ஓட்டுநராக வும், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அஸ்வின்சந்த் (27) மருத்துவ உதவியாளராகவும் சென்றனர்.

இதுகுறித்த தகவல் தமிழக ஆம்புலன்ஸ் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆங்காங்கே நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த ஆம்புலன்ஸுக்கு முன்பாக அந்தந்த பகுதியைச் சேர்ந்த சில ஆம்புலன்ஸ்களும் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்த வாறு விரைவாகச் செல்ல வழி ஏற் படுத்திக் கொடுத்தனர். இந்த தகவல் ரோந்து வாகன போலீஸாருக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்களும் இதற்கு உதவி செய்தனர்.

இதனால் மிக வேகமாக மாலை 6.10 மணிக்கு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மசானிக் எனும் தனியார் மருத்துவமனையை ஆம்புலன்ஸ் அடைந்தது. சுமார் 215 கி.மீ. தூரத்தை 2.55 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் கடந்தது. அந்த மருத்துவமனையில் அவசர பிரிவில் குழந்தை சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது உடல்நலத்துடன் உள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தற்போது தெரியவந்ததையடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையின் உயர் சிகிச்சைக்கு உதவிய ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர், மருத்துவ உதவியாளர், போலீஸாருக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x