

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று (ஜூலை 23) மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசவுள்ளார்.
திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் உள்ள ஜி கார்னர் மைதானத்தில் பொதுக்கூட்டத்துக்காக பிரம்மாண்ட மேடை மற்றும் ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் செய்துள்ளனர். பொதுக்கூட்டத்துக்கு வரும் ராகுல் காந்தியை வரவேற்கும் வகையில் திருச்சி மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் வரவேற்பு பதாகைகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு திருச்சிக்கு வரும் ராகுல் காந்தி, பொதுக்கூட்டம் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசிவிட்டு மீண்டும் அதே விமானம் மூலம் பெங்களூருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
ராகுல் காந்தி வருகையை யொட்டி ஏறத்தாழ 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் பொதுக்கூட்ட மைதானம் மற்றும் விவசாயிகளைச் சந்திக்கும் பண்ணை வளாகம் ஆகியவற்றைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்ட மேடைக்கு அவர் வருவதற்காக பிரத்யேகமான குண்டு துளைக்காத கார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் சிறப்பு வசதி கொண்ட வாகனம் ஆகியவை திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த பணிகளை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்துள்ளனர்.