

மரக்காணம் அருகே கடந்த 29-ம் தேதி நடந்த சாலை விபத்தில் 3 போலீஸார் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக 2 ஓட்டுநர்களை போலீஸார் கைது செய்தனர்.
மரக்காணம் அருகே ஆலப்பாக்கம் ஜகநாதபுரம் அருகில் கடந்த 29-ம் தேதி இரவு நின்றிருந்த கார் மீது புதுச்சேரியில் இருந்து மரக்காணம் நோக்கி வந்த மீன் ஏற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மரக்காணம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா, தனிப் பிரிவு தலைமை காவலர் ஆறுமுகம், நெடுஞ்சாலை ரோந்துப் பணி தலைமைக் காவலர் தவசீலன், சென்னை அசோக் நகரைச் சேர்ந்த விஜயா மற்றும் மரக்காணம் செல்லன் தெருவைச் சேர்ந்த சுரேஷ், ஜகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர், செட்டிநகர் டானா நகரைச் சேர்ந்த தனசேகர், ஆலப்பாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த காளிதாஸ் ஆகியோர் இறந்தனர்.
மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து புதுச்சேரி ஜிப்மர், பிம்ஸ் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிண்றனர். இந்த விபத்துக்கு காரணமான மீன் லாரி ஓட்டுநர் தலைமறைவானார். இவர் மீது மரக்காணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பாக நேற்று காலை கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(40) என்பவர் மரக்காணம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். நான்தான் விபத்துக்கு காரணமான மீன் லாரி டிரைவர் என போலீஸாரிடம் அவர் தெரிவித்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் மணிகண்டனிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதில் உண்மையான குற்றவாளி கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த கரப்பன் மகன் ராஜன்(40) என்பது தெரியவந்தது. அவருடைய ஏற்பாட்டின் பேரில் மணிகண்டன் சரணடைய வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜனை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக மணிகண்டனையும் போலீஸார் கைது செய்தனர்.