

சென்னை
சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவிலும் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு, பெடரல் வங்கியில் வட்டிக் குறைப்பு போன்ற காரணங்களால் பிற துறைகளில் முதலீடு செய்வது குறைந்து, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதனால், நகை வாங்குவது சற்று குறைந்தாலும், பழைய நகை களை விற்று, புதிய நகைகளாக மாற்றுவது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது:
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்கள் வாங்கும் திறன் குறைந்து வந்தது. இருப்பினும், அடுத்த சில நாட்களில் முகூர்த்த நாட்கள் நெருங்க உள்ளதால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், மக்கள் தங்கம் வாங்கி செல்கின்றனர். இதனால், நகை விற்பனையில் பெரிய பாதிப்பு இல்லை.
உள்ளூர் தங்கத்தின் தேவை 20 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், தங்கம் இறக்குமதியும் 22 சதவீதம் குறைந்துள்ளது. பழைய நகைகளை தற்போதுள்ள விலைக்கு விற்று மாற்றிச் செல்கின்றனர். இதுபோல, பழைய நகைகளை விற்று புதிய நகைகளை வாங்கிச் செல்வது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.