

சென்னை
சென்னை மாநகராட்சி சமுதாய நலக் கூடங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான முன்பதிவு கட்டணங்களை ஏடிஎம் கார்டு மூலமாக செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 56 சமு தாய நலக் கூடங்கள் இயங்கி வரு கின்றன. இவற்றில் பொதுமக்கள் தங்கள் இல்ல சுப விழாக்களை நடத்த வாடகை அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. ஷெனாய் நகர் அம்மா அரங்கம், தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கம் ஆகிய இரு ஏசி வசதி செய்யப்பட்ட அரங்கங்களும் உள்ளன. அவற்றில் விழாக்கள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
முதலில் வருவோருக்கு முன் னுரிமை அடிப்படையில் இவற்றுக் கான முன்பதிவு நடைபெற்று வருகின்றன. மிகக் குறைந்த கட்டணம் என்பதால், ஏழை எளிய மக்கள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சி களை நடத்துவதற்கு, இந்த சமுதாய நலக் கூடங்கள் பேருதவியாக இருந்து வருகின்றன.
9 ஆண்டுகளுக்கு முன்பு, இவற்றை இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி இருந் தது. அதில் செல்வாக்கு மிக்க நபர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், ஏழை எளிய மக் களுக்கு அரங்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், உரிய விழா அழைப்பிதழுடன் நேரடியாகவே முன்பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கான கட்டணம் இதுநாள் வரை டிடி ஆக எடுத்து கொடுக்க வேண்டி இருந்தது.
இதற்காக ஏழை மக்கள் வங்கிக்குச் சென்று, டிடி எடுத்து வருவதும் பெரும் சிக்கலாக இருந்தது. அதைக் கருத்தில் கொண்டு, ஏடிஎம் கார்டு மூலமாக முன்பதிவு கட்டணம் செலுத்தும் முறை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி சமுதாய நலக் கூடங்கள் மூலமாக ஆண்டுக்கு ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மொத்தம் 4,500 முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் ரூ.1 கோடியே 92 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
பொதுமக்கள் வங்கிக்குச் சென்று டிடி எடுக்க சிரமப்படுவதைக் கருத்தில் கொண்டு தற்போது பிஓஎஸ் இயந்திரம் மூலமாக, பயனாளியின் ஏடிஎம் கார்டிலிருந்து முன்பதிவு கட்டணத்தை செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளன. இது பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.