

வேலூர்
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
வேலூர் மக்களவைத் தொகுதி யில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல் இன்று (5-ம் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கியது. வரும் 9-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.
தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உட்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2 வாரங்களாக அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் வேலூரில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் வேலூர் தொகுதியை விட்டு நேற்று முன்தினம் இரவு வெளியேறினர். இருப்பினும், வெளியூர் ஆட்கள் யாராவது தங்கியுள்ளார்களா? என்பதை காவல் துறையினர் மாவட்டம் முழு வதும் ஆய்வு செய்தனர். அதே போல், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெறாமல் இருக்க நேற்று முன்தினம் இரவு முழுவ தும் காவல் துறையினர் தீவிர கண் காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை முன்னிட்டு 6 சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,553 வாக்குச் சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையங்களுக்கு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபாட் கருவிகள் கொண்டு செல்லும் பணி கள் நேற்று காலை தொடங்கின.
வாக்குச் சாவடிகளுக்கு தேவை யான அனைத்து பொருட்களும் வேலூரில் இருந்து அந்தந்த பகுதி களுக்கு நேற்று மாலை 6 மணிக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட் டன. இப்பணிகளை, ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை முறை யாக செய்து கொடுக்க வேண்டும் என வாக்குப்பதிவு மண்டல அலுவ லர்களுக்கு ஆட்சியர் உத்தர விட்டார்.
179 சாவடிகள் பதற்றமானவை
வேலூர் தொகுதியில் 1,553 வாக்குச்சாவடிகளில் 179 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை யொட்டி, அங்கு பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள் ளனர். அதேநேரத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப் பட்டுள்ள 59 இடங்களில் துணை ராணுவத்தினர் ஆயுதங்களுடன் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மக்களவைத் தொகுதி முழுவதும் 3 ஆயிரத்து 957 தமிழக காவல் துறையினர், 1,600 துணை ராணுவத்தினர், 400 ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தில் இருந்தும் 200 மீட்டர் தொலைவுக்கு அரசியல் கட்சியினர் இருக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தேர்தலையொட்டி வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவது, வாக்குச் சாவடிகளுக்கு வரும் வாக்காளர் களிடம் கட்சி சின்னங்களை காட்டி பிரச்சாரம் செய்வது, துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது, பரிசு மற்றும் பணம் வழங்குவதை கண்காணிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச் சாவடியில் திருட்டு
குடியாத்தம் காந்தி நகர் பகுதியில் அரசு திருமகள் கல்லூரி வளாகத்தில் ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வரு கிறது. இப்பள்ளியில் 11 கணினி கள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பு செயல்பட்டு வருகிறது. மேலும், இப்பள்ளியில் குடியாத்தம் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட 29, 30 மற்றும் 32-வது வார்டுகளுக்கான வாக்குச் சாவடி மையம் அமைக் கப்பட்டுள்ளது. தேர்தலை கண் காணிக்க சிசிடிவி கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. பள்ளிக்கு கடந்த சனிக்கிழமை முதல் இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. வேலூர் அலுவலர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களை பள்ளியில் வைக்க நேற்று காலை அங்கு சென்றனர்.
அப்போது, 5-ம் வகுப்பு அறைக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது அந்த அறையில் இருந்த 11 கணினிகள், ஜெராக்ஸ் இயந்திரம், ஸ்கேனர், பிரிண்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோயிருந்தன. நள்ளிரவில் திருட வந்த மர்ம நபர்கள் தேர்தலுக்காக அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பிறகு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.