தருமபுரியில் 2 கார்கள் மோதி விபத்து: 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உயிரிழந்த லதா, திருமூர்த்தி.
உயிரிழந்த லதா, திருமூர்த்தி.
Updated on
2 min read

தருமபுரி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 2 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

பென்னாகரம் பிடிஓ அலுவலகம் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (45). பென்னாகரம் பேருந்து நிலையப் பகுதியில் இவர் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வந்தார். இவர் மனைவி லதா (41). இவர் பென்னாகரம் அடுத்த எட்டிக்குழி கிராம அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர்களின் குழந்தைகள் நிதின் அபிநவ் (10), வேத ரித்திகா (6). 

தருமபுரி அடுத்த அதியமான் கோட்டை வடக்குத் தெரு கொட்டாவூர் பகுதியில் லதாவின் பெற்றோர் வீடு உள்ளது. நேற்று ஆடிப் பெருக்கு விழா அன்று திருமூர்த்தி, மனைவி மற்றும் குழந்தைகளுடன் லதாவின் பெற்றோர் வீட்டுக்குக் காரில் சென்றார். பின்னர், லதாவின் சித்தப்பா அல்லிமுத்துவின் மகள் அபிநயா கீர்த்தி (12)-யையும் உடன் அழைத்துக் கொண்டு காரில் பென்னாகரம் புறப்பட்டனர். இரவு 10.30 மணியளவில் இண்டூர் அடுத்த மல்லாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, எதிரே பென்னாகரம் அருகிலுள்ள பண்ட அள்ளி கிராமத்தில் இருந்து தருமபுரிக்கு வந்த கார் எதிர்பாராத விதமாக திருமூர்த்தி கார் மீது மோதியது. இந்த விபத்தில் ஆசிரியர் லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட திருமூர்த்தி, நிதின் அபிநவ், அபிநயா கீர்த்தி, வேத ரித்திகா ஆகியோர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி திருமூர்த்தி, நிதின் அபிநவ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேல் சிகிச்சைக்காக அபிநயா கீர்த்தி சேலம் அனுப்பப்பட்டார். அங்கும் சிகிச்சை பலன் தராமல் இன்று அதிகாலை சிறுமி அபிநயா உயிரிழந்தார். சிறுமி வேத ரித்திகா தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

எதிரில் வந்து மோதிய காரில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த விவேக் (30), பண்ட அள்ளியைச் சேர்ந்த ரத்தினவேல் (38), பாலகோடு பகுதியைச் சேர்ந்த சரவணன் (40), பிரகாஷ் (37) ஆகியோர் இருந்துள்ளனர். அவர்களும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், மேற்சிகிச்சைக்காக அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரவு 10 மணிக்குப் பிறகு இந்த சாலையில் போக்குவரத்து குறைந்து விடும். எனவே, நெரிசலற்ற சாலையாக இருப்பதால் இரவில் செல்லும் வாகனங்கள் சற்று வேகமாகச் செல்லும். விபத்து நடந்த பகுதியில் சாலை சற்றே வளைவான பகுதியாக இருப்பதாலும், வாகனங்கள் சற்று வேகமாகச் சென்றதாலும் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருப்பதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து இண்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  4 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால் பென்னாகரம், அதியமான்கோட்டை பகுதிகளில் பெரும் சோகம் நிலவுகிறது.

- எஸ். ராஜா செல்லம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in