Published : 04 Aug 2019 11:46 AM
Last Updated : 04 Aug 2019 11:46 AM

கஜா புயலின்போது ஒரு மீனவரைக் கூட இழக்கவில்லை: அமைச்சர் உதயகுமார் பெருமிதம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கஜா புயலின்போது ஒரு மீனவரைக் கூட இழக்கவில்லை என்று அமைச்சர் உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புயல், வெள்ளம் ஆகிய பேரிடர் தொடர்பான உதவி மற்றும் நிவாரணப் பயிற்சிகள் 3 நாட்கள் கடலோர மாவட்டங்களில் நடைபெறுகின்றன. முதல் நாளில் (ஆகஸ்ட் 2) கருத்துப் பட்டறையும், இரண்டாவது நாளில் (ஆகஸ்ட் 3) கண்காட்சியும் நடைபெற்றது. 3-வது மற்றும் நிறைவு நாளான இன்று (ஆகஸ்ட் 4) அனைத்து கடலோர மாவட்டங்களிலும் புயல் மற்றும் நகர்ப்புற வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் மீட்புப்பணி ஒத்திகை நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு சென்னை, சேப்பாக்கத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பேரிடரை எதிர்கொள்ளவும் இதில் பயிற்சிகள் வழங்கப்படும். மழை, புயல், வெள்ளம் வரும்போதும் நிலச்சரிவு ஏற்படும்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு, உயிர்ச்சேதத்தைத் தவிர்க்கும் வகையில் செயல்பாடுகள் அமையும். 

இந்த வகையில் ஒக்கி, கஜா புயல் ஆகிய பேரிடர்களை எதிர்கொண்டிருக்கிறோம். குறிப்பாக கஜா புயலின்போது மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இரவு முழுவதும் தகவல் அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்த மக்களின் பாராட்டுகளைப் பெற்றோம். ஒரு மீனவரைக் கூட இழக்காமல் நாம் பேரிடரை எதிர்கொண்டோம். 

இது பேரிடர் மேலாண்மைத் துறையில் எவ்வளவு வளர்ச்சி பெற்றுள்ளோம் என்பதை இது காட்டுகிறது. நவீனத் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சவால்களை சமாளித்து வருகிறோம்'' என்றார் உதயகுமார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x