

வேலூர்,
வேலூர் மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், குடியாத்தம் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வகுப்பறை பூட்டை உடைத்து சிசிடிவி கேமரா மற்றும் 11 லேப்டாப்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வேலூர் மக்களவைத் தொகுதி யில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல், நாளை (5-ம் தேதி) நடைபெற உள்ளது. வரும் 9-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.
தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 30 அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குகளை சேகரித்தார். இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது.
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 1,600 பேர் கொண்ட 20 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க 114 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 பேர் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து ஆயிரத்து 351 பேரும், பெண்கள் வாக்காளர்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 105 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. குடியாத்தம் அரசு தொடக்கப்பள்ளி ஒரு வாக்குச்சாவடியாக செயல்படுவதற்கான பணிகள் முடிந்த நிலையில் அப்பள்ளியின் வகுப்பறை பூட்டை உடைத்து சிசிடிவி கேமரா, 11 லேப்டாப்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.