Published : 04 Aug 2019 08:28 AM
Last Updated : 04 Aug 2019 08:28 AM

50 ஆண்டு சந்தையாக இருந்த ஊரணி மீட்பு: திருப்புவனம் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்பு வனத்தில் சந்தையாக மாறிய ஊரணி 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பல நூறு ஆண்டுகள் பழமையான மட்டை ஊரணி உள்ளது. ஒன்றே முக்கால் ஏக்கர் பரப்புள்ள இந்த ஊரணி நகரின் முக்கிய நீராதா ரமாக இருந்தது. இதை மக்கள் குளிக்க, துணி துவைக்க பயன் படுத்தி வந்தனர். இந்த ஊரணிக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

நகர் விரிவாக்கத்தால் 50 ஆண்டு களுக்கும் மேலாக ஊரணிக்குள் குப்பைகள் கொட்டப்பட்டன. இதனால் ஊரணி இருந்த சுவடு தெரியாமல் மறைந்து சமதளப் பரப்பானது. இதையடுத்து 2000-ம் ஆண்டில் அப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாரச்சந்தை தொடங்கப்பட்டது. வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெற்று வருகிறது.

ஊரணியை மூடியதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.

இதனால் ஊரணியை மீட்க வேண்டுமென திருப்புவனம் நகர மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இதையடுத்து ஊரணியை மீட்டு, சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.

வட்டாட்சியர் ராஜா, டிஎஸ்பி கார்த்திகேயன், பேரூராட்சி செயலர் குமரேசன் தலைமையிலான அதிகாரிகள் ஊரணியை தூர் வாரும் பணியை நேற்று தொடங்கி வைத்தனர். இதையடுத்து பட்டாசு வெடித்து திருப்புவனம் மக்கள் கொண்டாடினர்.

இதுகுறித்து வருவாய்த் துறை யினர் கூறும்போது, ஊரணி 10 அடி ஆழம் வரை தோண்டப்படுகிறது. அதேபோல் வரத்துக் கால்வாயும் தூர்வாரப்படும். ஊரணியில் இருந்த சந்தை, அருப்புக்கோட்டை நகருக்கான வைகை கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் அருகே உள்ள இடத்துக்கு மாற்றப்படுகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x