வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பிரச்சார நிறைவு நாளில் அதிமுக - திமுக போட்டி போட்டு வாக்கு சேகரிப்பு: அதிமுக கூட்டணி வாகன பேரணி; ஒரே மேடையில் திமுக கூட்டணி தலைவர்கள் 

வேலூர் மக்களவை தேர்தலையொட்டி நேற்று மாலை கிருபானந்த வாரியார் சாலையில் நடந்த இறுதி கட்ட பிரச்சார பொதுகூட்டத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்.
வேலூர் மக்களவை தேர்தலையொட்டி நேற்று மாலை கிருபானந்த வாரியார் சாலையில் நடந்த இறுதி கட்ட பிரச்சார பொதுகூட்டத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்.
Updated on
2 min read

வேலூர் 

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவு நாளான நேற்று தொகுதி முழுவதும் அதிமுக கூட்டணிக் கட்சியினர் வாகன பேரணி நடத்தினர். திமுக பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் என தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதி வாரியாக நேற்று இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் நடந்தது.

வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தொண்டர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக நேற்று காலை வீடு, வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். அனைத்து சட்டப் பேரவை தொகுதியிலும் மாலையில் வாகன பேரணியாகச் சென்று பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். வேலூர் தொரப்பாடியில் உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து தொடங்கிய வாகன பேரணி, லட்சுமி திரையரங்கம், சங்கரன்பாளையம், ஆரணி ரோடு, அண்ணா சாலை, பேலஸ் கபே சந்திப்பு, ஆற்காடு சாலை, சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் சிலை அருகில் நிறைவு பெற்றது.

அமைச்சர் பெருமிதம்

அப்போது, அமைச்சர் செங் கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கேட்காமலே கொடுக்கின்ற ஆட்சி அதிமுக. திமுக ஆட்சியில் இருந்த மின்வெட்டை போக்கி தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு. திமுக கொடுக்கும் வாக்குறுதி அனைத்தும் பொய்.

இப்போது கேபிள் கட்டணம் ரூ.130 கட்டினால் போதும். இந்த அரசு எடுக்கும் அனைத்து திட்டங் களும் சாமானிய மக்களுக்கானது. இன்னும் 15 நாட்களில் அனைவரது வீட்டுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப் படும்’’ என்றார்.

அப்போது, அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், பாஸ்கர், அரசு கொறடா ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

திமுக பொதுக்கூட்டம்

வேலூர் மண்டித் தெருவில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து இறுதிகட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த சதி செய்து தேர்தல் ஆணையமும், வருமான வரித் துறையினரும் இணைந்து ரெய்டு நடத்தினர். இதை மக்கள் நம்பாமல் திமுகவுக்கு அமோக வெற்றியை தேடிக் கொடுத்தனர்.

ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வை தைரியமாக எதிர்த்தார். அதன் பிறகு நீட் தேர்வு வந்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரித்ததை மறைத்து விட்டார்கள். இன்றுகூட நீட் தேர்வால் திருநெல்வேலியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு பொள்ளாச்சி சம்பவத்தை உதாரணமாக கூறலாம். கருணாநிதி மறைவுக்குப் பிறகு அண்ணா நினைவிடத்தில் அவருக்கு ஆறடி நிலம் கேட்டோம். அவர்கள் திட்டவட்டமாக மறுத்தார் கள். நீதிமன்றத்தில் வாதாடி அவருக்கு இடத்தைப் பெற்றோம். கருணாநிதிக்கு ஆறடி இடமில்லை என்றவர்களுக்கு வேலூர் மக்களும் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

முன்னதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, ‘‘தமிழகத்தின் அனைத்து உரிமை களும் பறிபோய்விட்டன. மாநிலங் களின் உரிமைகள் பறிபோகிற அணை பாதுகாப்பு சட்ட மசோதா வந்த பிறகு பெரும் அழிவை சந்திக்கப்போகும் மாநிலம் தமிழகம்’’ என்றார். தமிழக காங் கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, ‘‘38 எம்பிக்களால் என்ன பயன் என்றனர். தபால் துறை தேர்வை தமிழில் எழுத வாதாடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். 5 ஆண்டுகால பிரச்சினையை ஒரே வாரத்தில் சாதித்திருக்கிறார்கள்’’ என்றார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோரும் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in