Published : 28 Mar 2014 08:55 AM
Last Updated : 28 Mar 2014 08:55 AM

தலைமுறைகளை இணைத்த 10-ம் வகுப்பு தேர்வு: யார் அந்த சுப்பிரமணியம் சார்?

வெள்ளத்தால் போகாது... வெந்தணலால் வேகாது... கொள்ளத்தான் இயலாது... கொடுத்தாலும் நிறை வொழிய குறைபடாது... என்ற பெருமைக்குரியது கல்வி. படிக்கும் பருவத்தில் பல்வேறு காரணங்களால், அதனைத் தொடர முடியாமல் போன பலரின் ஆசையை தனியார் பயிற்சி மையங்களும், பல்கலைக் கழகங்களும் தீர்த்து வைத்து வரு கின்றன. கல்வியின் மரியாதை யையும், பெருமையும் அறிந்த வர்கள் இன்றும் ஆர்வத்தோடு கற்கும் முயற்சியைத் தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளை யத்தில், தாயும், மகளும், தந்தையும் மகனும் ஒரே பள்ளியிலும் தேர்வு எழுதிய சம்பவம், கல்வி கற்க வயது தடையில்லை என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

கவுந்தப்பாடி பிரிவில் நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணி யாளராகப் பணிபுரியும் குண சேகரனும் (50) அவரது மகன் தமிழீழமும் புதன்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர்.

“ஏழாம் வகுப்பு வரைக்கும் படிச் சேன்... அப்பறம் விளையாட்டு புத்தி, குடும்ப சூழ்நிலை... படிப்பை விட்டுட்டு டைலர் வேலைக்கு போயிட்டேன். மலைக்கிராமங்களில் படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகளை, என்னோட நண்பர் சுப்பிரமணியம் சார் தொடர்ந்து படிக்க வைச்சிட்டு வர்றார். எனக்கு தெரிந்த ஒரு பையனை படிக்க வைக்க அவரைப் பார்த்தப்ப, நீயே படிக்கலாமேன்னு சொன்னார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் படிக் கிறதுக்காக அவரோட பயிற்சி மையத்துக்கு போவேன்.

போன வருஷம் 8-ம் வகுப்பு பரீட்சை எழுதி, 243 மார்க் வாங்கி பாஸ் பண்ணினேன். இந்த தடவை பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதறேன்” என்றார் குணசேகரன்

அவரது மகனும் இன்று தேர்வு எழுதியது குறித்து கேட்டபோது, “நல்லா படிப்பா என்று பையன் தெம்பா பேசுவான். கணக்கு, ஆங்கில பாடங்களை அவன்கிட்ட கேட்டு படிச்சுகிட்டேன். பத்தாவது பாஸ் பண்ணினா வேலையில பிரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு” என்றார்.

அமலா மெட்ரிக் பள்ளியில் குணசேகரன் தேர்வு எழுத, பொலவக்காளிபாளையம் அரசு பள்ளியில் அவரது மகன் தமிழீழம் தேர்வு எழுதியுள்ளார். இருவரில் யார் அதிக மார்க் வாங்குவீர்கள் என கேட்டால், “பையன் தாங்க வாங்குவான்” என்று சிரிக்கிறார் குணசேகரன்.

அடுத்ததாய் கோபி பழனி யம்மாள் பெண்கள் பள்ளியில் ஆசனூரைச் சேர்ந்த மகேஷ்வரி (33)யும், அவரது மகள் ரூபாவும் ஒரே தேர்வு மையத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.

மகேஷ்வரியிடம் பேசியபோது, “பசுவண்ணபுரத்தில எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். அப்பறம் கல்யாணம் பண்ணி வைச்சிட்டதால, படிக்க முடியல. இது மாதிரி பாதியில படிப்பை விட்டவங்களை சுப்பிரமணியம் சார் படிக்க வைச்சுட்டு வர்றார். என்னையும் அவர்தான் படிக்கச் சொன்னார். போன வருஷம் கணக்கு, சமூக அறிவியல், ஆங்கிலம்னு மூணு பரீட்சை எழுதினேன். இந்த தடவை தமிழ், அறிவியல் பரீட்சை எழுதறேன்” என்றார்.

தாய், மகள் இருவரும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய நிலையில், தன் மகள் குறித்து கேட்டபோது, "பயப்படாம படிம்மான்னு என் பொண்ணு சொன்னா... இன்னைக்கு தேர்வு எழுதப் போறபோது, பயப்படமா எழுதும்மான்னு சொன்னா... நானும் பயப்படாமல் தேர்வை நல்லா எழுதிட்டு வந்திட்டேன்” என்றார் மகேஷ்வரி.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x