

திருச்சி
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி டெல்டா மாவட்டங்களில் காவிரிக் கரையில் பல்லாயிரக்கணக் கானோர் வழிபாடு நடத்தினர்.
தமிழ் மாதங்களில் பெண் தெய்வங்களுக்கு உகந்ததாகக் கருதப்படும் ஆடி மாதத்தின் முக்கிய நாளான ஆடி 18-ம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி திருச்சியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், ஓடத் துறை, தில்லைநாயகம் உள்ளிட்ட காவிரிப் படித்துறை பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.
பெண்கள் வாழை இலையில் பழம், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு உள்ளிட்டவற்றை வைத்து காவிரித் தாய்க்கு வழிபாடு நடத்தி, தாலி பெருக்கும் விதமாக ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு மாற்றி அணிந்து கொண்டனர். அதேபோல, புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடுகள் செய்து, புதிய தாலிக் கயிறு மாற்றிக் கொண்டு, திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டனர்.
மாநகராட்சி சார்பில் அம்மா மண்டபம் படித்துறையில் பழைய துணிகளைப் போட தொட்டிகள், உடை மாற்ற இரு பாலருக்கும் தனித் தனி அறைகள் அமைக்கப் பட்டிருந்தன. மேலும், குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தஞ்சை, நாகை மாவட்டங்களில்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சா வூர், திருவையாறு, கும்பகோணம் ஆகிய இடங்களில் காவிரிப் படித் துறைகளில் நேற்று ஆயிரக்கணக் கானோர் காவிரித் தாயை வழிபட்டனர். நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில், நாகை, பூம்புகார் கடற்கரைகளில் ஏராளமானோர் பூஜை செய்து காவிரித் தாயை வழிபட்டனர்.
காவிரி ஆற்றில் போதிய தண்ணீர் வராததால், அனைத்து படித்துறைகளிலும் பொதுமக்கள் நீராடுவதற்காக ஷவர், பம்ப் செட் வசதி செய்யப்பட்டிருந்தன. ஆற்றில் தண்ணீர் வராததால் வழக்கமான உற்சாகம் ஏதுமின்றி டெல்டாவில் ஆடிப்பெருக்கு களையிழந்து காணப்பட்டது.
ஒகேனக்கல், பவானி
இதேபோன்று, தருமபுரி மாவட் டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காவிரியாற்றிலும், ஒகேனக்கல் அருவியிலும் நீராடி புத்தாடை உடுத்தி கரையோர கோயில்களில் வழிபாடு நடத்தினர்.
சில கிராமங்களைச் சேர்ந்த வர்கள் குழுக்களாக வந்து தங்கள் கிராம கோயில்களின் சாமி சிலைகளை காவிரியாற்றில் நீராட்டி பூஜைகள் செய்து வழி பட்டனர்.
இதேபோன்று, ஈரோடு மாவட்டம் பவானியில் புதுமண தம்பதிகள் மணமாலையை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர். கூடுதுறையில் பெண்கள் முளைப்பாரியை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.