குழந்தைகளின் சுயசிந்தனை அறிவு வளர தாய்மொழி கல்வி அவசியம்: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அறிவுறுத்தல்
சென்னை
குழந்தைகளின் சுயசிந்தனை அறிவு வளர வேண்டுமெனில் தாய்மொழி யில் படிக்க வைக்க வேண்டும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
மத்திய அறிவியல் வளர்ச்சி நிறுவனம் (விஞ்ஞான் பிரச்சார்) தமிழில் அறிவியலை பரப்புதல், பிரபலப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்வது என்ற நோக்கில் ‘அறிவியல் பலகை’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் சார்பில் ‘தமிழில் அறிவியல்’ என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று தொடங்கியது.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
இன்றைய காலகட்டத்தில் அறி வியல் வளர்ச்சி குறித்த விழிப் புணர்வு மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அதை அவரவர் தாய்மொழி வழியாகவே மேற்கொள்வது மிகவும் சிறப் பானது.
என்னைப் போன்று தமிழில் படித்த பலர் அறிவியலுக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனவே, நம் தாய்மொழியைத் தாழ்த் தும்விதமாக யாரையும், தமிழில் படித்தும் முன்னேறினார் என குறிப் பிட வேண்டாம். இப்போதைய சூழல்களில் தமிழ்மொழியின் வளர்ச்சி அறிவியல் தொழில்நுட்பத் தையும் தாண்டிச் செல்கிறது. அதை மேம்படுத்தும் விதமாக தமிழ் மொழியில் அறிவியலை எழுத வேண்டும். அப்போதுதான் அடுத்தகட்டத்துக்கு தமிழை நகர்த்த முடியும்.
தாய்மொழியில் அறிவியல் பயிற்சி பெறுவது பின்னடைவல்ல, பெருமைக்குரிய விஷயமாகும். தாய்மொழிக் கல்விதான் அறிவியல் தொழில்நுட்பத்தில் நான் சிறந்து விளங்க பெரிதும் உதவியது. எனவே, குழந்தைகளின் சுயசிந் தனை அறிவு வளர வேண்டுமெனில் தாய்மொழியில் படிக்க வைக்க வேண்டும்.
தமிழ் நிலைத்து நிற்கும்
தமிழ் வழியில் படித்துதான் முன் னிலைக்கு வந்துள்ளோம். அதனால் நம் உரிமைகளை எப்போதும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவியல் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு முகவரியாக இருக்கும். அத்தகைய அறிவியலை நாம் தாய்மொழியில் கற்கும்போது, தமிழ் சான்றோர் அவையிலும் உயர்வாகப் பேசப் படும். விண்வெளி ஆராய்ச்சியிலும் தமிழ் நிலைத்து நிற்கும். அதற்கு அறிவியல் கோட்பாடுகள், தாய் மொழி தமிழ்வழியாக அனைவரை யும் சென்றடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விஞ்ஞான் பிரச்சார் நிறுவன இயக்குநர் நகுல்பராசர் பேசும் போது, ‘‘உலக அளவில் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய மொழிகளில் அறிவியலைப் பரப்புவதில் தமிழ் முதன்மையாக உள்ளது. இந்தச் சூழலில் நவீன அறிவியல் வளர்ச்சி குறித்த தகவல் களை தமிழில் விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற் காக ‘அறிவியல் பலகை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழில் அறிவியல் கருத்துகள், கண்டுபிடிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெறும். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்துடன் சேர்ந்து தமிழகத்தில் ‘அறிவியல் பலகை’ திட்டம் முன் னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் வழியாக தமிழகம் முழு வதும் தீவிர அறிவியல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு அறி வியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெரு மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
