Published : 03 Aug 2019 07:13 PM
Last Updated : 03 Aug 2019 07:13 PM

மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.3677 கோடியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய ஆட்சி: ஸ்டாலின் விமர்சனம்

பல்வேறு நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய மக்கள் நல நிதி ரூ.3677 கோடியை பயன்படுத்தாமல் அப்படியே திருப்பி அனுப்பிய ஆட்சி இந்த ஆட்சி என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வேலூர் தொகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்தார்.  சத்துவாச்சாரி, வேலப்பாடி போன்ற பகுதி மக்களிடையே வாக்கு சேகரித்து ஸ்டாலின் பேசியதாவது: 

“தமிழ்நாட்டில் ஓர் ஆட்சி இருக்கின்றது. ஆட்சி இருக்கின்றதே தவிர நடைபெறவில்லை. மக்களைப் பற்றி சிந்திக்காமல் அவர்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு, எதில் ஊழல் செய்யலாம்? எங்கு கமிஷன் வாங்கலாம்? எப்படி கரப்ஷன் செய்யலாம்? என்கின்ற நிலையில் ஒரு ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.

இன்று காலையில் ‘தனியார் ஆங்கில நாளேட்டில்’ இந்த ஆட்சியின் அலங்கோலத்தைப் பற்றி ஆதாரத்தோடு ஒரு செய்தியினை வெளியிட்டு இருக்கின்றார்கள். சி.ஏ.ஜி என்ற கணக்காய்வு செய்யக்கூடிய ஒரு அமைப்பு உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும், மத்தியிலும் இருக்கக்கூடிய ஆட்சிகள், அவை அறிவித்திருக்கக்கூடிய திட்டங்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்படுகின்றது. அப்படி அறிவித்து இருக்கக்கூடிய திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகின்றது.  ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக அவர்கள் செலவு செய்திருக்கின்றார்களா?, என்று கண்காணித்து ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையை தாக்கல் செய்யக்கூடிய பணி தான் சி.ஏ.ஜி என்ற அமைப்பிற்கு உள்ளது. அந்த சி.ஏ.ஜி அமைப்பின் சார்பில் புள்ளிவிவரத்தோடு வெளியிடப்பட்டிருக்கக்கூடிய செய்தியை, அந்த பத்திரிகையில் இன்றைக்கு ஆதாரத்தோடு எடுத்து வெளியிட்டு இருக்கின்றார்கள்.

பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட - பழங்குடியின சமுதாய மக்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்பதற்காக 2,394 கோடி ரூபாய் நிதி மத்திய அரசின் மூலமாக மாநில அரசிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்படி ஒதுக்கப்பட்டிருந்த நிதியை செலவு செய்யாமல் அப்படியே திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றது. 

அதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்.  100 நாள் வேலையை வழங்குவதற்காக ஏற்படுத்தித் தந்த திட்டம் தான் அது. அந்த திட்டத்திற்காக மத்திய அரசு மாநில அரசிற்கு ஒதுக்கிய நிதி 247 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதியையும் பயன்படுத்தாமல். அந்த நிதியை மத்திய அரசிற்கு அப்படியே திருப்பி அனுப்பி இருக்கின்றார்கள். 

அதேபோல் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருவதற்காக மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிதியை மாநில அரசுக்கு ஒதுக்கி இருக்கின்றது. அப்படி, ஒதுக்கிய தொகையில், 3 கோடி ரூபாய் தான் பயன்படுத்தி இருக்கின்றார்கள். மீதமிருக்கும் 97 கோடி ரூபாயை திருப்பி அனுப்பி இருக்கின்றார்கள்.

அதேபோல் மகளிருக்காக, முதன்முதலில் மகளிர் சுய உதவிக்குழுவை ஆரம்பித்தது 1989-ல் நம்முடைய தலைவர் கலைஞர்தான் ஆரம்பித்து வைத்தார்.  இந்த ஆட்சியில், கேள்வி கேட்பாரற்ற நிலையில் ஒரு அனாதையாக, அகதியாக மாறக்கூடிய நிலைக்கு மகளிர் சுய உதவிக்குழு போய்விட்டது.

மகளிர் சுய உதவிக் குழுவிற்கு சுழல் நிதி, வங்கிக் கடன், மானியத் தொகை போன்றவற்றுக்காக மத்திய அரசு நம்முடைய மாநிலத்திற்கு வழங்கிய தொகை 23 கோடி 84 லட்சம் ரூபாய். அந்த தொகையும் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றது.

எனவே, ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஒதுக்கிய தொகை 3,677 கோடி ரூபாய். அந்த 3,677 கோடி ரூபாயை இன்றைக்கு இந்த ஆட்சி திருப்பி அனுப்பி இருக்கின்றது என்றால், கையாலாகாத எடப்பாடி பழனிசாமி ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டு இருக்கின்றது என்பதற்கு இதைவிட வேறு சாட்சியும் சான்றும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இந்த லட்சணத்தில் அவர் பிரச்சாரம் செய்கின்ற பொழுது என்ன சொல்கின்றார் என்றால் நான் ஒரு விவசாயி என்று. "ரவுடிதான் நான் ஒரு பெரிய ரவுடி என்று சொல்வான்". அதுபோல், மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக் கொண்டு இருக்கின்றார். 'விவசாயி' பாட்டை பாடினால் விவசாயியா.

நான் கேட்கின்றேன் சேலத்திற்கும், சென்னைக்கும் இன்றைக்கு 8 வழிச்சாலை போடுகின்றீர்கள். 8 வழிச்சாலை அமைப்பதை நான் தவறு என்று சொல்லவில்லை நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அவசியம்தான். ஆனால், எட்டு வழிச்சாலை போடுவதால் அங்கு இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எவ்வளவு ஆபத்து வந்து, என்னென்ன கொடுமைகள் எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

எட்டு வழிச்சாலைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். எட்டு வழிச்சாலை போடக் கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்தத் தடையை உடைப்பதற்கு, மேல்முறையீட்டிற்கு ‘அப்பீலிற்கு’ சென்று இருக்கின்றார்கள். என்ன காரணம் என்றால், மிகப்பெரிய ஒப்பந்ததாரரான செய்யாதுரை முதல்வரின் சம்பந்திக்கு வேண்டியவர்.

அவரிடத்தில் பேரம் பேசி அந்த வேலையை ஒப்படைத்து, அவர் மூலமாக கொள்ளையடிக்க,  பணத்தை வாங்கிக் கொண்டார்கள். அதை மெய்ப்பிக்கக்கூடிய வகையில் சாலையை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றார்கள்.  அதுமட்டுமல்லாமல் தஞ்சையில் இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வரக்கூடாது என்று, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், அதைப்பற்றி இங்கு இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கின்றாரா? ஆனால், தன்னை ஒரு விவசாயி என்று இவர் எப்படி சொல்லலாம். இதுநாள் வரையில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருக்கிறார்கள்.

அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத ஒரு முதல்வர் இங்கு இருக்கின்றார். ஆனால், இவர் தன்னை ஒரு விவசாயி என்று சொல்வதற்கு என்ன அருகதை - யோக்கியதை இருக்கின்றது”. 

 இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x