

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சந்தையாக மாறிய ஊருணி 50 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பல நூறு ஆண்டுகள் பழமையான மட்டை ஊரணி உள்ளது. ஒன்னே முக்கால் ஏக்கர் பரப்புள்ள இந்த ஊரணி நகரின் முக்கிய நீராதாரமாக இருந்தது. குளிக்க, துணி துவைக்க போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த ஊருணிக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
நகர் விரிவாக்கத்தால் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊருணிக்குள் குப்பைகள் கொட்டப்பட்டன. இதில் ஊருணி இருந்த சுவடு தெரியாமல் மறைந்து சமதளப்பரப்பானது. இதையடுத்து 2000-ம் ஆண்டில் அப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாரச்சந்தை தொடங்கப்பட்டது. வாரந்தோறும் செவ்வாய்கிழமை சந்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஊருணியை மூடியதால் அப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்ததாகவும், இதனால் ஊருணியை மீட்க வேண்டுமென திருப்புவனம் நகர மக்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகின்றனர். இதையடுத்து அந்த ஊரணியை மீட்டு, சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.
வட்டாட்சியர் ராஜா, டிஎஸ்பி கார்த்திகேயன், பேரூராட்சி செயலர் குமரேசன் தலைமையிலான அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) ஊருணியை தூர்வாரும் பணியைத் தொடங்கினர். இதையடுத்து பட்டாசு வெடித்து திருப்புவனம் மக்கள் கொண்டாடினர்.
இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘ஊருணி 10 அடி ஆழம் வரை தோண்டப்படுகிறது. அதேபோல் வரத்துக்கால்வாயும் தூர்வாரப்படும். ஊருணியில் இருந்த சந்தை, அருப்புக்கோட்டை நகருக்கான வைகை கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் அருகேயுள்ள 2 ஏக்கருக்கு மாற்றப்படுகிறது, என்றார்.