திமுகவின் வெற்றியும் ‘சதுரங்க வேட்டை’ படமும்: முதல்வர் பழனிசாமியின் சுவாரஸ்ய பேச்சு

திமுகவின் வெற்றியும் ‘சதுரங்க வேட்டை’ படமும்: முதல்வர் பழனிசாமியின் சுவாரஸ்ய பேச்சு
Updated on
1 min read

கடந்த தேர்தலில் 'சதுரங்க வேட்டை' பட பாணியில் திமுக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, மக்களின் ஆசையைத் தூண்டியதாக முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர், அணைக்கட்டு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம். ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட கட்சி திமுகதான் என்பதை மக்கள் எப்போதும் மறந்து விடக்கூடாது. விஞ்ஞான மூளை பிடித்தவர்கள் (திமுக). எதைச் சொன்னால் மக்களை ஏமாற்ற முடியுமோ, அதைச் செய்பவர்கள். ஏமாற்றுப் பேர்வழி என்றாலே திமுகதான்.

ஒரு திரைப்படத்தில் சொல்வார்கள். ஒருவனின் ஆசையைத் தூண்டினால்தான் அவனை ஏமாற்ற முடியும் என்று. என்ன படம் என்று சரியாகத் தெரியவில்லை. (பக்கத்தில் இருப்பவர்கள் கூறிய பிறகு) ஆம், 'சதுரங்கவேட்டை'. 

நான் சினிமா பார்த்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் 'சதுரங்கவேட்டை' படத்தில் எனக்கு ஒரு காட்சியைப் போட்டுக் காட்டினர். அதில், ஒருவன் விற்பதற்காக ஒரு கடிகாரத்தைக் கொண்டு செல்வான். அதை யாருமே வாங்கமாட்டார்கள். இன்னொருத்தன் செல்வான், இந்தக் கடிகாரத்தைக் கொண்டு சென்று எப்படிப் பணம் பண்ணிக் கொண்டு வருகிறேன் பார் என்பான். 

அதே ஆளிடம் கடிகாரத்தைக் காட்டி, இல்லாததையும் பொல்லாததையும் சொல்வான். ஆசையைத் தூண்டுவான். உடனே அதற்கு மேலேயே பணத்தைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர் கடிகாரத்தை வாங்கிக் கொள்வார்.

இப்படிப்பட்ட ஏமாற்று வேலைகள் காரணமாகத்தான் திமுக வெற்றி பெற்றது. ஆசையை மக்களிடத்தில் தூண்டினர்; மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற்றனர். வெற்றியும் பெற்றுவிட்டனர்'' என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி. 

திரைப்படக்காட்சியுடன் அரசியலை ஒப்பிட்டு பேசிய அவரது சுவாரஸ்யமான பேச்சை மேடையில் இருந்தவர்கள் ஆர்வத்துடன் ரசித்து சிரித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in