Published : 03 Aug 2019 02:51 PM
Last Updated : 03 Aug 2019 02:51 PM

நெட்வொர்க் நிறுவனங்களின் தாமதத்தால் சைபர் கிரைம் புகார்கள் மீதான விசாரணையில் தேக்கம்

என்.சன்னாசி 

மதுரை

அனுமதியின்றி இணைய வழியில் நுழைவது, போலி இணைய வழி முகவரிகளைப் பதிவிடுதல், புகைப்படம், தகவல்களை மிகைப் படுத்தி சமூக ஊடகங்களில் வைரலாக்குவது மற்றும் ஏடிஎம், வங்கி கடன் அட்டைகளை முறைகேடாகப் பயன்படுத்துதல் போன்ற இணைய வழி தவறுகளை சைபர் குற்றங்கள் என போலீஸார் கூறுகின்றனர்.

கணினி, ஆன்ட்ராய்டு மொபைல் வளர்ச்சியால் சைபர் குற்றங்களும் அதிகரிக்கின்றன. இவ்வகைப் புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க காவல்துறை அலுவலகங்களில் சைபர் கிரைம் ஆய்வகம் செயல்படுகிறது. சைபர் குற்றம் குறித்த புகார்களுக்கு இப்பிரிவு போலீஸார் சேகரித்து வழங்கும் தகவல் அடிப்படையில் காவல்நிலைய போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.

சைபர் கிரைம் குறித்த புகார்கள் தொடர்பாக தேவையான தகவல்கள் அந்தந்த காவல்நிலைய ஆய்வாளர், விசாரணை அதிகாரிகள் கேட்டுக்கொள்வதன் பேரில் சம்பந்தப்பட்ட செல்போன் நெட் வொர்க் நிறுவனத்திடம் சைபர் கிரைம் போலீஸார் பெறுகின்றனர்.

அதிகரிக்கும் சைபர் கிரைம் புகார்களுக்கு ஏற்ப போலீஸார் பணிபுரிந்தாலும், நெட்வொர்க் நிறுவன அதிகாரிகள் தாமதமாகவே தகவல்களை வழங்குகின்றனர் என சைபர் கிரைம் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய ஏடிஎம், கிரிடிட் கார்டு மோசடி குறித்த புகார்களுக்கு தீர்வுகாண முடியவில்லை. இதனால், பாதிக்கப்பட்டோர் பணத்தை இழக்கின்றனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது: இணைய வழிக் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனியார் நெட்வொர்க் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம். புகார்கள் வந்ததும் தொடர்புடைய நெட்வொர்க் நிறுவனங்களுக்குத் தகவல் அனுப்பி, டவர் குறிப்பிடும் இடத்தைப் பார்க்க வேண்டும். பேசியவர், கேட்டவர் என இரு டவர்களின் தகவல்களைப் பெறவேண்டும். இதன் மூலம் குற்றம் புரிந்தோர், பாதிக்கப்பட்டோர் எங்கே இருந்தார்கள் என்பதை உறுதி செய்ய முடியும்.

நெட்வொர்க் நிறுவனம் தரும் தகவல் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்க முடியும். குறிப்பிட்ட நேரத்துக்குள் நெட்வொர்க் நிறுவனத்திடம் இருந்து உரிய தகவல் வருவதில்லை.

போலி வங்கிக் கடன் அட்டை மூலம் ஆன்லைனில் பொருட்கள் வாங்க முற்படும்போது அது தொடர்பான தகவல், கடன் அட்டையின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தியாக வரும். அப்போது உடனடியாகச் செயல்பட்டு சைபர் கிரைமில் புகார் செய்தால் முறைகேட்டைத் தடுக்க முடியும்.

இதற்கு நெட்வொர்க் நிறுவனம் துரிதமாகச் செயல்பட்டால் மட்டுமே இந்த முறைகேட்டைத் தடுக்க முடியும், என்றனர்.

நெட்வொர்க் நிறுவனத்தினர் கூறுகையில், சைபர் கிரைம் போலீஸார் கேட்கும் தகவல்களை நேரத்தைப் பொருத்து நாங்கள் துரிதமாகவே அனுப்புகிறோம். தொழில்நுட்ப அடிப்படையில் போலீஸார் கேட்கும் நேரத்தில் இருந்து குறிப்பிட்ட நேரம் எங்களுக்குத் தேவை, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x