நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரிலேயே முன்வைக்கப்பட்ட திருச்சி மாவட்ட வளர்ச்சிக்கான கோரிக்கைகள்: மத்திய அமைச்சர்களிடம் நேரிலும் வலியுறுத்திய எம்.பி.க்கள்

நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரிலேயே முன்வைக்கப்பட்ட திருச்சி மாவட்ட வளர்ச்சிக்கான கோரிக்கைகள்: மத்திய அமைச்சர்களிடம் நேரிலும் வலியுறுத்திய எம்.பி.க்கள்
Updated on
2 min read

அ.வேலுச்சாமி

திருச்சி

திருச்சி மாவட்டம் தொடர்புடைய பல்வேறு முக்கிய கோரிக்கைகளை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எம்.பி.க்கள் முன்வைத்ததுடன். அக்கோரிக்கைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் திருச்சி, கரூர், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகளுக்குட் பட்டுள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி எம்.பி.யாக சு.திருநாவுக் கரசர், பெரம்பலூர் எம்.பி.யாக பாரிவேந்தர் (எ) பச்சமுத்து, கரூர் எம்.பி.யாக ஜோதிமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தவிர, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் டி.ரத்தினவேல் ஆகியோர் மாநிலங் களவை எம்.பி.க்களாக இருந்தனர். இவர்களில் டி.ரத்தினவேலின் பதவிக்காலம் நடப்பு கூட்டத் தொடரின்போது, கடந்த ஜூலை 24 ம் தேதியுடன் முடிவடைந்தது.

2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் திருச்சி மாவட்டம் தொடர்புடைய பல்வேறு முக்கிய கோரிக்கைகள், இம்மாவட்டம் சார்ந்த எம்.பி.க்களால் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளன.

நிறைவடையாத மேம்பாலம்

குறிப்பாக, திருச்சி ஜங்ஷன் பகுதியில் நெரிசலைக் குறைப்ப தற்காக மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

எனினும் 0.268 ஹெக்டேர் ராணுவ நிலம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட் டுள்ளதால், இப்பணிகள் இன்னும் முழுமை பெறாமல் சென்னை வழித்தடத்தை இணைக்கும் பாலப் பணிகள் நிறைவடையாமல் உள்ளது. இதுகுறித்து அதிமுக எம்.பி டி.ரத்தினவேல் மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, உடனடியாக ராணுவ நிலத்தை அளித்து, பாலப் பணிகளை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஜூலை 11-ம் தேதி மக்களவையில் திருச்சி தொகுதி எம்.பி சு.திருநாவுக்கரசரும் வலியு றுத்தினார்.

விமானநிலைய விரிவாக்கம்

கடந்த ஜூன் 26-ம் தேதி மக்களவையில் பேசிய திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர், விமானநிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளை மத்திய அரசு விரைந்து முடிக்க வேண்டும். திருச்சியிலிருந்து நாட்டின் பிற நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிக விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சித்த மருத்துவக் கல்லூரி

இதேபோல, பெரம்பலூர் தொகுதி எம்.பி.யான பாரிவேந்தர் நாடாளுமன்றத்தில் பேசும்போது, திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள பச்சமலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வேண்டும். பழங்குடியினர் நலத்துறை சார்பில் இங்குள்ள மலைவாழ் மக்களுக்கு கல்வி, சாலை, குடிநீர், சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மூலிகைகள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால், இத்தொகுதியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். முசிறி - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

புதிய ரயில் வழித்தடம்

மணப்பாறை உள்ளிட்ட கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மணப்பாறை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அந்த தொகுதியின் எம்.பி ஜோதிமணி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இவர்கள் அரியலூர் - பெரம்பலூர், துறையூர்-நாமக்கல் இடையே புதிய வழித்தடம் அமைத்து, ரயில் சேவை வழங்க வேண்டும். குருவாயூர், மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் லால்குடியில் நின்று செல்ல வேண்டும். பேட்டைவாய்த்தலையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். திருச்சி பொன்மலையில் பயிற்சி, தேர்வு முடித்த 3500 பேருக்கு ரயில்வேயில் நிரந்தர வேலை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசியுள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.

சலுகை கட்டணத்தில் பயணிக்கும் மூத்த குடிமக்களை இழிவுபடுத்தும் வகையில், ரயில்வே டிக்கெட்டில் உள்ள வாசகங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை திருச்சி சிவா எம்.பி மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி மாவட்டம் தொடர்புடைய பல்வேறு கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் இப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் பேசியதுடன், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்தி வருவது திருச்சி மாவட்ட மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in