

பெ.பாரதி
அரியலூர்
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே.அப்துல் கலாம் மறைந்த நாளன்று தொடங்கப்பட்டு, மரக்கன்றுகள் விதைத்தல், பனை விதைகளை நடுதல், துணிப்பைகள் வழங்குதல், இயற்கைக்கு ஆதர வான விழிப்புணர்வு பேரணிகளை நடத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் ‘அக்னி சிறகுகள்' என்ற வாட்ஸ் அப் குழுவினர்.
அரியலூர் மாவட்டம் திருமா னூரை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் குழுவில் திருமானூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே.அப்துல் கலாம் மறைந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி தொடங்கப்பட்ட ‘அக்னி சிறகுகள்' என்ற வாட்ஸ் அப் குழுவில் உள்ள இளைஞர்கள் சமூக சிந்தனைகளை முன்னிறுத்தி இன்றளவும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள், திருமானூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரி, குளம் மற்றும் ஆற்றங்கரைகளில் 12 ஆயிரம் பனை விதைகளை விதைத்துள்ள துடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
அதேபோல பெரம்பலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள சமூக சேவை அமைப்புகள், மாணவர்கள் என பலருக்கும் 15 ஆயிரம் பனை விதைகளை வழங்கியுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் பணி புரியும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் தங்களது விடுமுறை நாட்களில் இதற்கான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இதுமட்டுமன்றி, இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவர்களைக் கொண்டு மரக் கன்றுகள் நடுவது. பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது. நீராதாரம் காக்க ஏரி, குளங்களைத் தூர் வாருவது உள்ளிட்ட பல்வேறு சூழல் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின் றனர். இதில், கடந்தாண்டு திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 106 வகையான மரக்கன் றுகள் கண்காட்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இக்கண் காட்சியை 30 ஆயிரம் பேர் பார்வை யிட்டுப் பாராட்டிச் சென்றனர்.
இதுதவிர, பாளையப்பாடி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் கடந்தாண்டு ஆழ்துளைக் குழாய் அமைத்து மாணவர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட் களைத் திரட்டி தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விநியோகித்தனர்.
அதேபோல, சுற்றுவட்டாரத்தில் உள்ள சில கிராமங்களில் இளை ஞர்களின் ஒத்துழைப்புடன் ஏரி, குளங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிகளுக்கு குறைந்த விலையில் மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர். தேவைப்படு வோருக்கு இலவசமாக பனை விதைகளை வழங்கி வருகின்றனர்.
சுற்றுவட்டார பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குத் தேவை யான பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை இலவசமாக வழங்குவதுடன், டெங்கு உள்ளிட்ட காய்ச்சலைத் தடுக்க கசாயம் வழங்குகின்றனர். தமிழக அரசு விதித்த தடையை அடுத்து பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க் கப் பழக்கும் விதமாக பொதுமக் களுக்கு இலவசமாக துணிப் பைகளை வழங்கி வருகின்றனர்.
திருமானூர் அருகேயுள்ள பாளையப்பாடி அரசு நடுநிலைப் பள்ளியைத் தத்தெடுத்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் அப்துல் கலாமின் பிறந்த நாளில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த இளைஞர்களுக்கு ஆதர வாக சமூக ஆர்வலர்கள் பலரும் ஆலோசனைகளைத் தெரிவிப்ப துடன் உதவிகரமாக உள்ளனர்.
இயற்கையை காப்பதே இலக்கு
“அரியலூர் மாவட்டம் முழு வதும் 5 லட்சம் பனை மரங்களை வளர்த்தெடுத்தல். அரசுப் பள்ளி களின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுதல். அரிய லூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட் டத்தை உயர்த்த விவசாயிகளுக்கு உறுதுணையாய் இருத்தல். நாட்டு மரக்கன்றுகள், சிறுதானிய வகைகளை அனைத்து கிராமங் களுக்கும் எடுத்துச் செல்லுதல்.
மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து துணிப்பைகளை கையோடு கொண்டுசெல்லத் தூண்டுதல் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு அவற்றை முன்னெ டுத்துச் செல்கிறோம். மறைந்த குடியரசுத் தலைவர் ஏபிஜே.அப்துல் கலாமின் கனவின் அடிச்சுவட்டில் தொட்டுத் தொடரும், இயற்கையைப் பேணிக் காப்பது ஒன்றையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார் ‘அக்னி சிறகுகள்' குழுவின் உறுப்பினரான பாளையப்பாடி பாலாஜி.