Published : 01 Jul 2015 05:23 PM
Last Updated : 01 Jul 2015 05:23 PM

உடுமலை அருகே மழை தரும் ‘சத்திர கொடை கல்வெட்டு’

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது குடிமங்கலம். சங்க காலத்தில் கொடிமங்கலம் என்றும், சோழர் காலத்தில் பெரியமங்கலம் அல்லது நத்தம்மேடு என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், பழமைவாய்ந்த கல்வெட்டு உள்ளது. நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆண்ட சிற்றரசரால், அப்பகுதி பூளவாடியில் உள்ள பெருமாள் கோயிலுக்காக தானமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் உடுமலை பகுதி கள ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் கூறியதாவது:

இந்தக் கல்வெட்டை ஆய்வு செய்தபோது, வாமன அவதாரம் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அச்சுதராய மகாராஜாவின் தென்னாட்டு பிரதிநிதி வளைய தேவ மகாராஜாவால், அச்சுதமகாராஜாவின் நன்மைக்காக பெரியமங்கலத்தை (குடிமங்கலம்), பூளைப்பாடிகால்பள்ளி (பூளவாடி) என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை சத்திரம் கொடை கல்வெட்டு, வாமன முத்திரை கல்வெட்டு, மழை தரும் கல்வெட்டு என பல பெயர்களில் மக்கள் அழைக்கின்றனர். அந்தக் காலத்தில் அரசர் ஒருவரின் நலன் வேண்டி, குடிமங்கலத்தின் மேற்கில் சுங்காரி முடக்கு, தெற்கில் கொண்டன்பட்டி, கிழக்கில் உடையார் கோயில் குளம் வரை சுற்றியுள்ள நஞ்சை, புஞ்சை, தோட்டம், தொடுகை, மாவடை, மரவடை, காரவடை என அனைத்தும் சந்திரன், சூரியன் உள்ள காலம் வரை தானமாக கொடுக்க வேண்டும். இதற்கு அகிதம் (தீங்கு) விளைவித்தால் மாதா, பிதா, குரு, தெய்வம், பிராமணர் ஆகியோரை கொன்ற பாவத்துக்கு ஆளாவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

அப்பகுதியைச் சேர்ந்த குமார் சிதம்பரம் கூறும்போது, “30 ஆண்டுகளுக்கு முன்பு, குடிமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊழியர் குடியிருப்பு கட்டுவதற்காக குழி தோண்டியபோது ஏராளமான கல்வெட்டுகள், முதுமக்கள் தாழி, மண் பானைகள் கிடைத்ததாகவும், ஆனால் அவை முறையாக பாதுகாக்கப்படாததால் காலப்போக்கில் அழிந்துவிட்டது” என்றார்.

தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறை உதவி இயக்குநர் (ஓய்வு) பூங்குன்றன் கூறும்போது, “இது விஜயநகரப் பேரரசு காலத்தில் நடைபெற்றுள்ளது. 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர்கள், மடாதிபதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். அதனால் மடங்களுக்கு செல்வாக்கு அதிகரித்தது. அந்த வகையில், குறிப்பிட்ட ஒரு கோயில் மடத்துக்கு, ஒரு ஊரையே தானமாக கொடுக்கப்பட்டதை கல்வெட்டு குறிக்கிறது” என்றார்.

கல்வெட்டில் உள்ள வாசகங்களின் விவரம் தெரியாத கிராம மக்கள் சிலர், வறட்சிக் காலங்களில் அங்கு வந்து வழிபாடு நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அங்கு வழிபாடு நடத்தினால், மழை பெய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால்தான், அதனை ‘மழை தரும் கல்வெட்டு’ என அழைக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x