பழங்குடியின கிராமத்தில் பரவும் மர்ம காய்ச்சல்; உரிய சிகிச்சை கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவலம்

மர்ம காய்சலால் பாதிக்கப்பட்ட கீழ்பூனாட்சி மலைவாழ் கிராம பெண்.
மர்ம காய்சலால் பாதிக்கப்பட்ட கீழ்பூனாட்சி மலைவாழ் கிராம பெண்.
Updated on
2 min read

எஸ்.கோபு

பொள்ளாச்சி 

காடம்பாறை அடுத்த கீழ்பூனாட்சி வன கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சுகாதார துறையினர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலிருந்து 40 கி.மீ தொலைவில், ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அட்டக்கட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கீழ்பூனாட்சி கிராமம். பூனாட்சி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 42 பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. தேன், கிழங்கு, சீமார் புல் உள்ளிட்ட வனப்பொருட்கள் சேகரித்தல் மற்றும் வனப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்துவருகிறது. இந்த கிராமத்தில் செயல்பட்டுவரும் தொடக்கப்பள்ளியில் 12 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மூன்று தலைமுறைகளுக்கு மேல் இப்பகுதியில் வசித்து வரும் மலைமலசர் பிரிவை சேர்ந்த இம்மக்களுக்கு குடிநீர், மின்வசதி, கழிப்பிடம், பாதுகாப்பான குடியிருப்புகள் என எந்த அடிப்படை வசதியும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியில்லாததால், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூனாட்சி காட்டாற்றின் தடுப்பணையில் இருந்து தண்ணீரை எடுத்துப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆற்றில், யானை, கரடி, சிறுத்தை, செந்நாய்,மான் உள்ளிட்ட வனவிலங்குகளும் தண்ணீர் குடிக்க வருகின்றன. வனவிலங்குகள் தாக்கலாம் என்ற அச்சத்தில் இரவு நேரத்தில் குடிசைகளை விட்டு வெளியே வருவதில்லை. சுத்திகரிக்கப்படாத, பல நாட்கள் தேங்கி இருக்கும் தண்ணீரை குடிப்பதால், பெரும்பாலான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதி மக்களுக்கு, கடந்த சில நாட்களாக கை, கால் வலி, வாந்தி, மயக்கம், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள், போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் கடந்த 15 நாட்களாக வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இதனால் போதிய வருவாய் இன்றி தவிக்கின்றனர்.

இது குறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம் கூறும்போது, கீழ்பூனாட்சி மலை கிராமத்தில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இக்கிராமத்தில் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், பழங்குடியினருக்கான நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் அளிக்கப்பட்டுவரும் மருத்துவ சேவை பெரும்பாலான கிராமங்களுக்கு சரியான நேரத்தில் சென்று அடைவதில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் உரிய சிகிச்சை அளிப்பதில்லை என்ற புகார் வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறையினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மலை கிராமப் பகுதிக்கு சிறப்பு மருத்துவ குழுவை அனுப்பி சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இந்நிலையில், வால்பாறை வட்டார மருத்துவ அலுவலர் பரணிதரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமத்தினரிடம் இருந்து ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

இது குறித்து மருத்துவ குழுவினர் கூறும்போது, ‘தற்போது காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு காய்ச்சல் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுள்ளது. ரத்தமாதிரி பரிசோதனைக்கு பின்னரே எவ்வகையான காய்ச்சல் என தெரியவரும்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in