செல்போனை பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய அரசு ஓட்டுநர்
செல்போனை பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய அரசு ஓட்டுநர்

20 கி.மீ தொலைவுக்கு செல்போனை பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய அரசு ஓட்டுநர் : பயணிகள் வாழ்க்கையோடு விளையாடியவர் பணியிடை நீக்கம்

Published on

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை சென்ற அரசு பேருந்தில் சுமார் 20 கிலோ மீட்டருக்கு மேலாக செல்போனை பார்த்துக்கொண்டே  பேருந்தை இயக்கிய ஓட்டுநர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து ஆலங்குடியை கடந்ததும் பேருந்தின் ஓட்டுநர் தனது பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தை  பார்க்கத் தொடங்கினார்.  

ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டும்,  மறுகையில் செல்போனை பார்த்துக்கொண்டும் பேருந்தை ஒட்டியுள்ளார்.இதனால் அச்சத்தோடுப் பயணிகள் பேருந்தில் அமர்ந்திருந்தனர்.  ஏதோ அவசரத்துக்கு மெசேஜை பார்க்கிறார் என்று நினைத்தப் பயணிகளுக்கு அதிர்ச்சி.

ஆலங்குடியில் செல்போனில் வாட்ஸ் அப்பைப் பார்க்கத் தொடங்கிய ஓட்டுநர் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் வரை சுமார் 20 கிலோ மீட்டருக்கு மேலாக செல்போனிலேயே அடிக்கடி மூழ்கியபடி பேருந்தை இயக்கியுள்ளார். இதற்கு சக பயணிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.  இதை,  ஓட்டுநரின் அருகே பயணித்தப் பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து ஓட்டுநரின் செயல் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மண்டல போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் உத்தரவைத் தொடர்ந்து பட்டுக்கோட்டைக் கிளை மேலாளர் விசாரணையில் ஈடுபட்டார். விசாரணையில், செல்போனை பார்த்துக்கொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுநர், ஆலங்குடியைச் சேர்ந்த மூக்கையா என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in