

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொது இ-சேவை மையத்தில், புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரித்திருப் பதாகவும், சான்றிதழுக்கு விண்ணப்பிப்போர் பல்வேறு சிரமங்களை எதிர்கொள் வதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த இ-சேவை மையம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்பட்டது. வருவாய்த்துறை சான்றுக்கு ரூ.50, பிற விண்ணப்பங்களுக்கு ரூ.100 கட்டணம் பெறப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ளலாம். சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண நிதி உதவித்திட்டம் தொடர்பான அனைத்து கோரிக்கை மனுக்களும் பதிவு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சான்றிதழ்கள் வழங்குவதில் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி, அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சர்வர் பிரச்சினையை காரணம்காட்டி, உரிய நேரத்தில் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி, இ-சேவை மையத்தில் பொதுமக்கள் முற்றுகையிடும் சம்பவங்களும் நடந்தன.
தற்போது, இந்த மையத்தை பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்த தொடங்கியதையடுத்து, புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாக ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘பொதுமக்கள் அதிகளவில் பணம் செலவு செய்து சான்றிதழ்களை பெற வேண்டிய நிர்பந்தம் புரோக்கர்களால் ஏற்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்கள், புரோக்கர்களிடம் பணம் கொடுத்தால் மட்டுமே, வெகுவிரைவில் வேலை நடக்கும், என்ற சூழல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து காத்திருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புரோக்கர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், மாநகராட்சி வளாகம், திருப்பூர் வடக்கு, தெற்கு வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தின் பிற வட்டாட்சியர் அலுவலகங்களிலும் புரோக்கர்களின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இந்த புகார் குறித்து எல்காட் திருப்பூர் மாவட்ட மேலாளர் (பொறுப்பு) தனலெட்சுமியிடம் பேசியபோது, ‘புரோக்கர்களால் உடனடியாக சான்றிதழ்களை பெற்றுத்தர முடியாது. புரோக்கர்கள் சர்வ சாதாரணமாக இ-சேவை மையத்தின் உள்ளே வந்து செல்வது குறித்து விசாரித்து, அங்கிருப்பவர்களை எச்சரிக்கிறேன்’ என்றார்.