Last Updated : 03 Aug, 2019 10:56 AM

 

Published : 03 Aug 2019 10:56 AM
Last Updated : 03 Aug 2019 10:56 AM

நீண்ட விசாரணைக்குப் பின்னர் மாலத்தீவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார் முன்னாள் துணை அதிபர்

வீட்டுக் காவலில் இருந்து தப்பித்து முறையான எந்த ஆவணமும் இல்லாமல் தூத்துக்குடிக்கு வந்த மாலத்தீவு  முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் நீண்ட விசாரணைக்குப் பின்னர் மீண்டும் மாலத்தீவுக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்.

வீட்டுக்காவலில் இருந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் அகமது அதீப் கடந்த 27-ம் தேதி இழுவைப் படகு மூலம் தூத்துக்குடி வந்தார். அவர் வருவதை உளவுத்துறை தகவல் மூலம் தெரிந்துகொண்ட இந்திய கடலோர காவற்படை அவரை நடுக்கடலிலேயே தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) அவரிடம் சென்னையிலிருந்து சென்று குடியுரிமை அதிகாரி விசாரணை மேற்கொண்டார். விசாரணையின்போது மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன், கடலோர காவற்படை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர். விசாரணையின்போது அகமது அதீப் இந்தியாவில் தஞ்சம்புக அனுமதி கோரியுள்ளார். ஆனால், மாலத்தீவு அரசு அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறியதாலும் இந்தியா - மாலத்தீவு இடையேயான நட்புறவைக் கருத்தில் கொண்டும் அவரை மீண்டும் மாலத்தீவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

அனைத்து விதமான அலுவல் ரீதியான பணிகளும் முடிந்த பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அவர் வந்த படகிலேயே மீண்டும் மாலத்தீவு அனுப்பப்பட்டார். அவருடன் பாதுகாப்புக்காக இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த 11 பேர் சென்றுள்ளனர். சர்வதேச எல்லையில் மாலத்தீவு கடற்படையினரிடம் அதீபை ஒப்படைத்துவிட்டு அவர்கள் வேறு படகில் இந்தியா திரும்புகிறார்கள். படகு 36 மணி நேரத்தில் மாலத்தீவு சென்றடையும் எனத் தெரிகிறது.

அன்று நண்பர்.. இன்று கைதி.. அதீபின் பின்னணி:

மாலத்தீவு அதிபராக அப்துல்லா யாமீன் பதவி வகித்தபோது துணை அதிபராக இருந்தவர்தான் இந்த அகமது அதீப். யாமீனின் நெருங்கிய நண்பராக இருந்தார். ஆனால், ஆட்சியை கவிழ்க்க சதி செய்தததாக அதீப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு அதிபர் அப்துல்லா தனது மனைவியுடன் படகில் சென்றபோது படகில் குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாமீன் உயிர்த் தப்பினார். மனைவி மற்றும் பாதுகாவலர்கள் 2 பேர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர். 

அதிபரை கொல்ல முயன்றதாக முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் (34) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. படகில் குண்டு வெடித்தது குறித்து விசாரணை நடத்த எஃப்.பி.ஐ. அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீவிர ஆய்வு செய்து படகில் வெடிகுண்டு எதுவும் வெடிக்கவில்லை என்று கூறினர். இந்நிலையில் வீட்டுக்காவலில் இருந்த அகமது அதிப் தலைமறைவானார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது. தற்போது தூத்துக்குடிக்கு வந்த அவர் மீண்டும் மாலத்தீவுக்கே அனுப்பப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x