Published : 03 Aug 2019 10:21 AM
Last Updated : 03 Aug 2019 10:21 AM

ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை திரும்பப் பெறுக: இரா.முத்தரசன்

சென்னை

திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "வேலூர் தொகுதியில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றியை உறுதிப்படுத்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகின்றார். வேலூர் தொகுதி மக்கள் மக்கள் ஸ்டாலின் பிரச்சாரத்திற்குச்  சென்ற இடங்களில், திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

இதனை சகித்துக்கொள்ள இயலாத ஆளும் அதிமுக, தனக்குள்ள ஆட்சி அதிகாரத்தை அதிகாரிகள் மூலம் தவறாகப் பயன்படுத்தி, வழக்குகளின் மூலம் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. இஸ்லாமிய மக்களை திருமண மண்டபத்தில் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார் என்ற காரணத்திற்காக, மண்டபத்தை மூடி சீல் வைத்துள்ளனர்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த், தோல் தொழிற்சாலை உரிமையாளர் பரிதாபாபு, ஜமாத் நிர்வாகி ஜக்ரியா ஆகிய நால்வர் மீதும் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கையை மிக வன்மையாக கண்டிப்பதுடன் மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டதால் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு இடர் ஏற்படும். ஆதலால் சீல் அகற்றப்பட்டு மண்டபத்தை திறப்பதுடன் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்", என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x