Published : 03 Aug 2019 08:19 AM
Last Updated : 03 Aug 2019 08:19 AM

சித்தார்த்தா தற்கொலையின் பின்னணியை ஆராயாவிட்டால் வணிகர்கள் தற்கொலை தொடர் நிகழ்வாகிவிடும்: ஏ.எம்.விக்ரமராஜா எச்சரிக்கை

சென்னை

தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா தற்கொலையின் பின்னணியை மத்திய, மாநில அரசுகள் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வணிகர்கள் தற்கொலை தொடர் நிகழ்வுகளாகிவிடும் என்று  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத்  தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வணிகர்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகி இருப்பதை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தாவின் தற்கொலை நிகழ்வு நிரூபித்துள்ளது. இதன் பின்னணியை மத்திய, மாநில அரசுகள் ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வணிகர்கள் தற்கொலை என்பது தொடர் நிகழ்வுகளாகி விடும். இதன் பின்னணி பொரு ளாதார பின்னடைவு என்றாலும், ஜிஎஸ்டி வரி விதிப்பின் கோர முகமும் ஒரு காரணமாகும்.

ஒரே தேசம், ஒரே வரி என்பதை வணிகர்கள் ஏற்றுக்கொண்டு தேசிய பொருளாதாரத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். 
கடந்த 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள குளறுபடிகளைக்  களைந்திட, 2 ஆண்டுகள் கால அவகாசம் நிர்ணயித்து அதை செயல்படுத்தி இருக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 36 முறை கூடி, 94 திருத்தங்களை செய்துள்ளது.

இந்நிலையில் வணிகர்களுக்கு கால அவகாசம் மிகவும் அவசியம். சாதாரண பிராண்டட் பொருட்களுக்கு 5 சதவீத வரி அறிவிக்கப்
பட்டுள்ளது. ஆனால் பிராண்டட் அல்லாத வணிக நிறுவனத்தின் பெயர் மட்டுமே பதித்துள்ள பேக்கிங் பொருட்களுக்கு, 2017-ம் ஆண்டிலிருந்து  வரி விதிப்போம் என சூப்பர் மார்க்கெட்டுகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆய்வு முடியும் வரை கடையைத்  திறக்கவும் அனுமதிப்பதில்லை. இந்நிலை தொடர்ந்தால் சிறு, குறு, மத்திய நிறுவனங்களின் வணிகம் பாதிப்படையும்.  தமிழக வணிகர்கள் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும். இதுதொடர்பாக பேரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெற உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x