Published : 03 Aug 2019 08:16 AM
Last Updated : 03 Aug 2019 08:16 AM

அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை தேர்தலில் பணிபுரிந்தோருக்கு மதிப்பூதியம் கணக்கீடு: விவரங்களை ஆக.10-க்குள் அனுப்ப சத்யபிரத சாஹு அறிவுறுத்தல்

சென்னை

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் மதிப்பூதியத்தை கணக்கிட்டு 10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார்.

மக்களவை பொதுத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 10-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடி
யாக அமலுக்கு வந்தன. 

தமிழகத்தில் வேலூர் நீங்கலாக 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடந்தது. சட்டப்பேரவையின் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அன்றைய தினம் நடந்தது. எஞ்சிய 4 தொகுதிகளுக்கான தேர்தல் மே 19-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடந்தது.

தேர்தலை பொறுத்தவரை, மாவட்ட தேர்தல் அதிகாரியாக ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். சென்னையில் மட்டும் மாநகராட்சி ஆணையர் தேர்தல் அதிகாரியாக இருந்தார். இதுதவிர, தேர்தல் நடத்தப்படும் தொகுதிகளில் தனித்தனி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியில் இருந்தனர். இதுதவிர, வருவாய்த் துறையின் அனைத்து நிலைகளில் உள்ள அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, அவர்களது அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், மக்களவை தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் மதிப்பூதியத்தை கணக்கிட்டு, அனுப்பி வைக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழகதலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், டிஆர்ஓ, ஆர்டிஓ, தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மாநகராட்சி ஆணையர், தாசில்தார், துணை தாசில்தார், மண்டலஅதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களின் உதவி அதிகாரிகள் ஆகியோருக்கு அதிகபட்சம் ரூ.33 ஆயிரம் வரை மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய அதிகாரிகளின் அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவு அதிகாரிகள், அலுவலர்கள், பறக்கும்படை, வீடியோ கண்காணிப்பு படை, வீடியோ பார்வைப் படை உள்ளிட்ட படைகள், மண்டல உதவியாளர்களுக்கு ரூ.24,500 வரை மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான அலுவலர்கள், விஏஓக்கள், கிராம உதவியாளர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த் துறை அலுவலர்கள், கணினி புரொகிராமர்களுக்கு ரூ.17 ஆயிரம் வரையும்,  வாக்காளர் அடையாளஅட்டை தயாரிப்பு பணியில் ஈடுபட்டவர்கள், தேர்தல் தொடர்பான தரவு பதிவு அலுவலர்களுக்கு ரூ.7 ஆயிரம் வரையும், தேர்தல் தொடர்பான பிரிவு எழுத்தர்களுக்கு ரூ.5 ஆயிரமும் மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 10 முதல் மே 23-ம் தேதி வரை மதிப்பூதியம் கணக்கிடப்பட்டு, ஆகஸ்ட் 10-க்குள் தேவையான தொகை குறித்த பட்டியலை அனுப்பி வைக்குமாறு சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x