Published : 03 Aug 2019 08:08 AM
Last Updated : 03 Aug 2019 08:08 AM

செல்போன் செயலிகள் மூலம் பிளஸ் 2 பருவத் தேர்வு வினாத்தாள் வெளியானது: விடைகளுடன் வந்த மாணவர்களால் தெரியவந்தது

கோப்புப் படம்

திருவாரூர்

பிளஸ் 2 மாணவர்களுக்கு நடைபெற்றுவந்த முதல் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள்கள் வாட்ஸ் அப் மற்றும் ஷேர் இட் செயலிகள் மூலமாக முன்கூட்டியே வெளியாகியிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளல் 2 மாணவர்களுக்கான முதல் இடைப்பருவத் தேர்வு கடந்த 29-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.

கடந்த ஆண்டு முதல், அரசுப் பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் அனைத்து பருவத் தேர்வுகளுக்கு மான வினாத்தாள்களை பள்ளிக்கல்வித் துறையே மண்டலவாரியாக தயாரித்து பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது.

அந்த வகையில் திருச்சி, கரூர்,பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களை
உள்ளடக்கிய திருச்சி மண்டலத்துக்கான வினாத்தாள்கள் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த 29-ம் தேதி தொடங்கி நடைபெற்ற பிளஸ் 2 முதல் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள்கள் அனைத்தும் 2 நாட்களுக்கு முன்னதாகவே வாட்ஸ் அப், ஷேர் இட் செயலிகள் மூலம் மாணவர்களுக்கு கிடைத்துள்ளன.

நேற்று நடைபெற்ற இயற்பியல் பாடத்துக்கான தேர்வின்போது, திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் சிலவற்றில் மாணவர்கள் முன்கூட்டியே விடைகளை எழுதி வைத்திருந்ததை தேர்வு அறையில் ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர். இந்த வினாக்கள்தான் கேட்கப்படும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் என்று மாணவர்களிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது, வினாத்தாள்கள் முன்னரே வெளியானது தெரியவந்தது.

மாணவர்களின் செல்போன்களில் உள்ள ஷேர் இட் செயலியை ஆய்வு செய்தபோது, தேர்வு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்னரே, வினாத்தாள்களை அதில் பதிவேற்றம் செய்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

கடந்த ஆண்டு வட்டவாரியாக சில பள்ளிகளை வினாத்தாள் மையமாகச் செயல்படுத்தி அதன் மூலமாகத் தேர்வு நடைபெறும் நாளன்று மட்டுமே, அனைத்து பள்ளிகளுக்கும் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

ஆனால், இந்த ஆண்டு முதல் இடைப் பருவத் தேர்வு தொடங்குவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவே அனைத்து வினாத்தாள்
களும் இவ்வாறு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு பள்ளியின் வாயிலாகவே இவ்வாறு வினாத்தாள்கள் வெளியாகி இருக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், தேர்வுத்தாள் தயாரிக்கும் அச்சகத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்து மன்னார்குடி கல்வி மாவட்ட அதிகாரி மணிவண்ணன் கூறியபோது, "சமூக வலைதளங்கள் மூலமாக வினாத்தாள்கள் வெளியாகியுள்ளதாக கூறுகிறார்கள். இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். ஷேர் இட் மற்றும் வாட்ஸ் அப்
செயலிகள் மூலம் பரவிய வினாத்தாள்கள், திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பரவவில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x