

எஸ்.கோபாலகிருஷ்ணன்
திருவாரூர்
கோயில் யானைகளுக்கு, இன விருத்தி செய்வதற்கான உரிமை மறுக்கப்படுவதாக விலங்கின ஆர்வலர்களும், யானைப்பாகன்
களும் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் 35 பெண் யானைகள் வளர்க்கப்படுகின்றன. இந்த யானைகளின் முக்கியத்துவம் கருதி, கடந்த 2006-ம் ஆண்டு முதல் நலவாழ்வு முகாம் நடத்தி புத்துணர்வு வழங்கும் தமிழக அரசு, அந்த யானைகளை இனப்பெருக்கம் செய்ய வைப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கூறிய போது, "இறைபணியில் யானை, பசு, குதிரை உள்ளிட்ட விலங்குகளுக்கு மனிதனைவிடக் கூடுதல்முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உணர்த்துவதற்கே கோயில்களில் விஸ்வரூப தரிசனத்
தின்போது விலங்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் கோயில் யானைகளையும் இறைபணிக்கு உட்படுத்
தும்போது, இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்துவதால் எந்த பாதகமும் ஏற்படாது" என்றார்.
யானைப் பாகன் ஸ்ரீரங்கம் சிவஸ்ரீதரன் கூறியபோது, "கோயில் மாடுகள் இனவிருத்திக்கு அனுமதிக்கப்படும்போது, கோயில் யானை
களையும் அனுமதிப்பதில் தவறில்லை. கேரளாவில் நம்பூதிரிகள் தங்கள் வீடுகளிலேயே, யானைகளுக்கு இனப்பெருக்கம் செய்கின்றனர். வனத்துறைக்குச் சொந்தமாக டாப்சிலிப்பில் 35 யானைகளும் முதுமலையில் 28 யானைகளும் உள்ளன. அவை அனைத்தும் இனப்பெருக்கத்துக்கு உட்படுத்தப்படுகின்றன. தமிழக அரசு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தும்போதே இனப்பெருக்கத்துக்குத் தகுதியுள்ள யானைகளை அதற்கு உட்படுத்த வேண்டும் என்பதே யானைப் பாகன்களின் விருப்பம்" என்றார்.
சத்தியமங்கலம் புலிகள் சரணாலய வன கால்நடை மருத்துவர் ஜெ.அசோகன் கூறியபோது, ‘‘கோவில் யானைகள் இனப்பெருக்
கம் செய்வது ஒரு நல்ல திட்டம்தான்’’ என்றார்.
ஓய்வுபெற்ற கால்நடைத் துறை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வன் கூறியபோது, ‘‘யானைகள் இனப்பெருக்கம் செய்வது குறித்து வனத் துறை ஆர்வமாக இருந்தாலும், அறநிலையத் துறை இடையே ஒருமித்த கருத்து நிலவுவதில்லை’’ என்றார்.
வன விலங்கு ஆர்வலர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கூறியபோது, ‘‘கோயில் யானைகளை இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தக்
கூடாது என அறநிலைய, வனத்துறை சட்டம் சொல்லவில்லை. விலங்குகளின் இனவிருத்தியைத் தடுப்பதற்கு எவ்வித உரிமையும் கிடையாது. கோயில் யானைகள் ஈனும் குட்டி, தாயுடன் அதே கோயிலில் வளரும்போது, அதை கோயில் கலாச்சாரங்களுக்குப் பழக்குவதும் எளிதாகும்" என்றார்.