Published : 03 Aug 2019 07:42 AM
Last Updated : 03 Aug 2019 07:42 AM

ஒவ்வொரு பேரிடரும் புதுப்புது படிப்பினைகளை தருகின்றன: அரசு தலைமைச் செயலர் கே.சண்முகம் தகவல்

சென்னை

ஒவ்வொரு பேரிடரும் புதுப்புது படிப்பினைகளை கற்றுத் தருகின்றன என்று அரசு தலைமைச் செயலர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், வருடாந்திர பேரிடர் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணபயிற்சி குறித்த கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் அரசு
தலைமைச் செயலர் கே.சண்முகம் பங்கேற்று, கருத்தரங்கைத் தொடங்கிவைத்து பேசியதாவது:

ஒவ்வொரு பேரிடரும் நமக்குபடிப்பினையை கற்றுத்தருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது, ஏராளமான உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டன. அதன் பின்னர், அதை எதிர்கொள்ள தொழில்நுட்ப அடிப்படையில் தயாராக இருக்கிறோம். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் மூலம் வெள்ள தடுப்பு மேலாண்மை பலப்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு ஒக்கி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கியது. அது அப்பகுதியை தாக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள கூட போதிய நேரம் இல்லை. கடலுக்கு சென்ற மீனவர்களை திரும்ப அழைப்பதற்கான போதிய நேரமும், தகவல் தொடர்பு வசதிகளும் இல்லை. இதுபோன்ற காலத்தில் புயலை தமிழகம் எதிர்கொண்டது.

கடந்த ஆண்டு கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கியது. அதிக அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் மூலம், பேரிடரால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டு, மனித உயிர்கள் பாதுகாக்கப்பட்டன.  ஆனால் சொத்துகள் சேதத்தை தடுக்க முடியவில்லை. இதன் மூலம் "இயற்கையை வெல்ல முடியாது. சமாளிக்க மட்டுமே முடியும்" என்ற படிப்பினையை கற்றுக்கொண்டோம்.

இதுபோன்ற கருத்தரங்கங்கள் நடத்தி, உரிய செயல் திட்டங்களை வகுப்பதாலும், பேரிடர் காலத்தில் யாருக்கு, என்னென்ன பணிகள் என விவாதித்து தெளிவு பெறுவதன் மூலமும் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளை மேலும் குறைக்க முடியும். பேரிடருக்கு பிறகு, பாதிப்புகளில் இருந்து விரைவாக மீளவும் முடியும். ஒவ்வொரு பேரிடரும் புதுப்புது படிப்பினைகளை கற்றுத் தருகின்றன. அவை, அடுத்து வரும் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளவும், நிவாரணப்
பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் உத்வேகத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை ஆணையர் கே.சத்யகோபால் பேசியதாவது:

பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை, மீட்பு, நிவாரணப் பணிகள் போன்றவற்றை மட்டுமே அரசு மேற்கொண்டு வந்தது. அது
குறித்த தரவுகளை ஆவணப்படுத்தவில்லை. அதனால் பிற்காலத்தில் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான கொள்கைகளை உருவாக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதை தவிர்க்கவும், பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தவும் டிஎன் ஸ்மார்ட் என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அது பொதுமக்கள், அதிகாரிகள், கொள்கை முடிவுகளை எடுப்போர் ஆகியோர் அனைவருக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கருத்தரங்கில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் என்.சி.மார்வா,  வரு வாய்த் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்,  தமிழ்நாடு, புதுச்சேரி பிராந்திய கடற்படை  தலைமை அதிகாரி கே.ஜே.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x