Published : 03 Aug 2019 07:23 AM
Last Updated : 03 Aug 2019 07:23 AM

மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு வேலூர் மாவட்டத்தை பிரிக்க பரிசீலனை: தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அணைக்கட்டில் நேற்று மாலை முதல்வர் பழனிசாமி பேசிய பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கூட்டத்தின் ஒரு பகுதியினர். படம்: வி.எம்.மணிநாதன்

வேலூர் 

வேலூர் பெரிய மாவட்டம் என்பதால், தேர்தலுக்குப் பிறகு மாவட்டத்தைப் பிரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டிடும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக அணைக்கட்டில் நேற்று மாலை நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறுபான்மை மக்கள் பாதுகாப்புடன் வசிக்கின்றனர். அணைக்கட்டு தொகுதியில் மேல் அரசம்பட்டு அணை கட்டுவதற்கு பரிசீலனை செய்யப்படும். வேலூர் மாவட்டம் பெரிய மாவட்டம் என்பதால் தேர்தலுக்குப் பிறகு
பிரிக்க பரிசீலிக்கப்படும். பால்கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் எதையும் கூறவில்லை. கேபிள் டிவி கட்டணத்தை குறைத்துவிட்டோம்.

வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்திய சாதனை திமுகவைமட்டுமே சேரும். கட்டுக்கட்டான பணத்தை வருமான வரித் துறை
யினர் பறிமுதல் செய்ததால் தேர்தல் கமிஷன் இந்தத் தேர்தலை நிறுத்தியது. ஸ்டாலின் முழுக்க முழுக்க பொய் பேசி வருகிறார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது திமுக ஆட்சிதான். ஊழல் பணத்தை வைத்திருந்த வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்றதால் பரிதாபமான நிலை ஏற்பட்டது. அவர்கள் செய்த தவறுகளையும் பழியையும் எங்கள் மீது போடுகின்றனர். 

எல்லா கட்சியிலும் தலைவர்கள், அவர்களின் வாரிசுகள் கட்சிப் பொறுப்புக்கு வருவதில் தவறில்லை. ஆனால், கட்சிக்கு தலை
வர் ஆவதுதான் தவறு என்கிறோம். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், இப்போது உதயநிதி வந்துள்ளார். இதைத்தான் நாங்கள் வாரிசு அரசியல் என்கிறோம்.

முன்னாள் மேயர் கொலை

ஸ்டாலின் போகும் இடமெல்லாம் சட்டம் - ஒழுங்கைப் பற்றி பேசி வருகிறார். திருநெல்வேலி திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்
வரி கொலை செய்யப்பட்டபோது அஞ்சலி செலுத்தச் சென்ற ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்றார். 

கொலை செய்தது யார் என்று பார்த்தால், திமுகவின் மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயன். இரண்டே நாளில் அவர் கைது செய்யப்பட்டார். இப்பொழுது ஸ்டாலின் என்ன பேசப் போகிறார். அதிமுக மீது பழிசொல்ல வேண்டும் என்பதற்காகவே இப்படி கூறுகிறார். 

திமுகவினர் ஒழுங்காக இருந்தால் கொலை, கொள்ளை திருட்டு எங்கேயும் நடக்காது. பிரியாணி கடையில் நடந்த பிரச்சினையில் ஸ்டாலின் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். அவரது கட்சிக்காரர்களை சரி செய்தால் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் வீதியில் நடக்க முடியுமா? வியாபாரிகள் யாரும் வியாபாரம் செய்ய முடியாது.  

திமுகவின் ஐந்து பவுன் நகை அடமானம் ரத்து என்ற  தேர்தல் வாக்குறுதியை நம்பி பலரும் நகைகளை அடமானம் வைத்தனர். இப்போது அந்த நகையை மீட்க முடியாமல் உள்ளனர். விரைவில் நோட்டீஸ் வந்தால் என்ன செய்யப் போகிறீர்கள். திமுகவை நம்பினால் இப்படித்தான் இருக்கும். ஏமாற்று வேலையின் காரணமாகத்தான் திமுக வெற்றிபெற்றது. இந்தியாவிலேயே  விஞ்ஞானரீதியாக ஏமாற்றும் கட்சி திமுக. 

ஆட்சியை கவிழ்க்கிறேன் என்று கூறி வருகிறார். எங்களிடம் இருப்பவர்களுக்கு அமைச்சர் பதவி தருவதாகக் கூறி தனியாக பிரித்துச் சென்று இன்று நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்கள். பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்’’. இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x