கரூர் இரட்டைக் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கே.பாஸ்கரன்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கே.பாஸ்கரன்
Updated on
1 min read

கரூர்

கரூர் மாவட்டம் குளித்தலை இரட்டைக் கொலை வழக்கு விவகாரத்தில் குளித்தலை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் முதலைப்பட்டியை சேர்ந்த வீரமலை (70). அவர் மகன் நல்லதம்பி (44). முதலைப்பட்டி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வருவாய்த்துறை கடந்த ஜூலை 25-ம் தேதி குளத்தை அளவீடு செய்தப்போது ஆக்கிரமிப்புகளை இருவரும் அடையாளம் காட்டினர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 29-ம் தேதி 6 பேர் கொண்ட கும்பல் நல்லதம்பி மற்றும் வீரமலை ஆகிய இருவரையும் வெட்டிக்கொன்றது. இவ்வழக்கில் மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 6 பேர் கடந்த ஜூலை 31-ம் தேதி சரணடைந்த நிலையில் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில ஒருவர் நேற்று சரணடைந்தார்.

திருச்சி சரக டிஐஜி வே.பாலகிருஷ்ணன் முதலைப்பட்டியில் வீரமலை, நல்லதம்பி ஆகியோர் வெட்டிக்கொல்லப்பட்ட இடங்களில் நேற்று ஆய்வு செய்தார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன் முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் வீரமலையை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பத்திரத்தில் கையெழுத்து பெற்றுச்சென்றார். இதுகுறித்து வீரமலை குளித்தலை காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முதலைப்பட்டியில் நடந்த இரட்டை கொலையில் கொல்லப்பட்ட வீரமலை கடந்த 4 மாதங்களுக்கு முன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றதாக அளித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், திருச்சி சரக டிஐஜி வே.பாலகிருஷ்ணன் குளித்தலை இன்ஸ்பெக்டர் கே.பாஸ்கரனை இன்று (வெள்ளிக்கிழமை) பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஜி.ராதாகிருஷ்ணன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in