

சென்னை
நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு தமிழக அரசே காரணம் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி 2017 ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வைக் கொண்டுவந்தது பாஜக அரசு. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படியான அந்தத் தேர்வை தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? அதனால் மாணவி அனிதா தற்கொலை செய்தார்.
அதற்கடுத்த ஆண்டு 2018 இல் மூன்று மாணவியர் தற்கொலை செய்தனர். இந்த 2019 ஆம் ஆண்டிலும் கீர்த்தனா என்ற மாணவி தற்கொலை செய்துள்ளார். மாணவி கீர்த்தனா, பெரம்பலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து நடத்துநர் செல்வராஜின் மகள். 12 ஆம் வகுப்பில் 1053 மதிப்பெண் எடுத்த இவர் 2018 இல் நீட் எழுதினார்.
தேர்வாகவில்லை. அதனால் சென்னையில் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயிற்சி பெற்று, 2019 இல் மறுபடியும் எழுதினார். இந்த முறையும் மருத்துவப் படிப்புக்குத் தேர்வாகவில்லை. விரக்தியில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மாணவி கீர்த்தனாவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதுடன் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆறுதல் தெரிவிக்கிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலான இந்த நீட் தேர்வை 2017 மற்றும் 2018 இல் சிபிஎஸ்இ அமைப்பே நடத்தியது. தேர்வின்போது நிறைய குளறுபடிகள், தில்லுமுல்லுகள், ஏன் மோசடிகளும் கூட அரங்கேறின. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்ததால், நீட் போன்ற தேர்வுகளை நடத்துவதற்கென்றே தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதுவே இந்த ஆண்டு தேர்வை நடத்தியது.
நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் மாணவர்கள் நீட் எழுதினர். அதில் 7,97,042 பேர் (56.50%) தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் 1,23,078 பேர் நீட் எழுதியதில் 59,785 பேர் (48.57%) தேர்ச்சி பெற்றனர். ஆனால், தமிழக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஒருவர் கூட சேர முடியவில்லை.
தமிழ் வழியில் பயின்ற மாணவர் ஒருவர் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. காரணம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலான நீட் தேர்வு, இந்தி மாணவர்களுக்கு 'ஓடும் நீரோடு சேர்ந்து ஓடும் போட்டி'யாக இருக்கையில், தமிழ் மாணவர்களுக்கோ ‘எதிர்நீச்சல் போட்டி’யாக இருப்பதுதான்.
இத்தகைய நீட்டை நுழைத்தது, அதனால் மாணவிகள் பலர் இறந்தது ஆகியவற்றிற்கான முழு பொறுப்பும் அதிமுக ஆட்சியாளர்களையே சேரும். குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நீட்-விலக்கு மசோதா, 2017 செப்டம்பர் 22-ம் தேதியே திருப்பி அனுப்பப்பட்டிருந்தும், அதை மக்களுக்குச் சொல்லாமல் மறைத்தவர்கள் அவர்கள். அது மட்டுமல்ல, திருப்பி அனுப்பவில்லை என்று பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீட்டை விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் வேறு சொல்கிறார்கள்.
இதனால்தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அனிதா முதல் இன்றைய கீர்த்தனா வரை நீட் விஷயத்தில், கூட இருந்தே குழி பறித்த அதிமுக அரசைக் குற்றம் சாட்டுகிறது", என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.