Published : 02 Aug 2019 10:53 AM
Last Updated : 02 Aug 2019 10:53 AM

மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை என்றாலும் மனம் தளரக் கூடாது: வாசன்

சென்னை

மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை என்றாலும் கவலைப்படத் தேவையில்லை என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் பெரம்பலூரைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா, தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டது வேதனைக்குரியது, வருத்தம் அளிக்கிறது. குறிப்பாக நீட் தேர்வில் 384 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் மனம் உடைந்து உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் மாணவியின் பெற்றோர்கள் மீளாத் துயரத்தில் இருக்கிறார்கள். உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவர்களை படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் படும்பாடு அளவிடற்கரியது. பெற்றோர்கள் கடின உழைப்பை மேற்கொண்டும், கடன் வாங்கியும் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். பெற்றோர்களின் கனவை நிறைவேற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை. அதே நேரத்தில் தங்களால் படிக்க முடியவில்லை என்றாலும், தேர்ச்சி பெற முடியவில்லை என்றாலும், நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. விரக்தி அடையாமல் அடுத்து நடைபெற இருக்கின்ற தேர்வில் தேர்ச்சி பெற முயற்சிகள் மேற்கொள்ளலாம். அதனை விடுத்து மனம் தளர்ந்து தங்கள் இன்னுயிருக்குத் தீங்கு விளைவிக்கும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது.

எனவே மாணவர்கள் எல்லோரும் வருங்காலத் தலைமுறைகள் மட்டுமல்ல, வருங்கால இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.

மேலும் மாணவர்கள் தாங்கள் பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைக்காகவும், தங்களின் வாழ்வு சிறக்கவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து நல்ல முயற்சிகளில் ஈடுபட்டு நல்வாழ்வு வாழ வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் கல்விக்கு முன்னுரிமை அளித்து அவர்கள் வாழ்வில் சிறக்க வழி வகுக்க வேண்டும்", என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x