பாரிமுனை பிஎஸ்என்எல் தீ விபத்து: தொலைபேசி சேவை முடங்கியது; ஒரு வாரத்துக்குப் பின் நிலைமை சீராகும்

பாரிமுனை பிஎஸ்என்எல் தீ விபத்து: தொலைபேசி சேவை முடங்கியது; ஒரு வாரத்துக்குப் பின் நிலைமை சீராகும்
Updated on
1 min read

பிஎஸ்என்எல் இணைப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் தொலைபேசி சேவை முடங்கிய நிலையில் ஒரு வாரத்துக்குப் பிறகு நிலைமை சீராகும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசியின் துறைமுகம் தொலைபேசி இணைப்பகத்தில் இன்று (01.08.2019) அதிகாலை ஐந்து மணியளவில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. 

முதல் தளத்தில் பரவிய நெருப்பு, மற்ற இடங்களுக்கும் பரவியது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன. நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அலுவலகத்தில் உள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் எரிந்தன.

இந்த விபத்தில் வட சென்னை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சேவைகளும் பிராட்பேண்ட் என்று அழைக்கப்படும் இணைய சேவைகளும் முடங்கியுள்ளன. 

இந்திய ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்டவைகளின் தலைமை அலுவலகங்களும் பாரிமுனையில்தான் இயங்கிவருகின்றன. அவற்றின் சர்வர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் 29,000 தொலைபேசி இணைப்புகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.  தமிழக அரசின் இ-சேவையும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக  பி.எஸ்.என்.எல் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

''பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி, பெரு முயற்சியுடன் சேவையை மீண்டும் வழங்க ஒரு வாரம் தேவைப்படும் என்று நம்பப்படுகிறது. சேவையில் ஏற்பட்டுள்ள இடையூறுக்கு சென்னை தொலைபேசி வருத்தம் தெரிவிக்கிறது.  தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in