

சென்னை
சென்னையில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட அறிவிப்பில், "தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் சென்னை, எழும்பூர், மாநில அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், வரும் 7-ம் தேதி காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளன.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக 10,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 7000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 5000 ரூபாய் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்பெறும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்பெறும். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர், கல்லூரியின் முதல்வரிடம் உரிய படிவத்தில் பரிந்துரையைப் பெற்று போட்டி நாளன்று துணை இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும்.
போட்டி விதிமுறைகள், விண்ணப்பப் படிவம் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்", என தெரிவிக்கப்பட்டுள்ளது.