Published : 01 Aug 2019 03:26 PM
Last Updated : 01 Aug 2019 03:26 PM

ஆர்எஸ்எஸ் ராணுவப்பள்ளி: ராணுவத்தை இந்துத்துவமயமாக்கும்; கி.வீரமணி கண்டனம்

சென்னை

ஆர்எஸ்எஸ் ராணுவப் பள்ளி நடத்துவதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆட்சி வாய்ப்பைப் பயன்படுத்தி, உடனடியாக இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்றி, இந்துத்துவாவை எங்கெங்கிலும் பரவிடச் செய்து நிலைநாட்ட வேண்டும் என்பதைத் திட்டவட்டமாக்கிக் கொண்டு வெளிப்படையாகவே ஆர்எஸ்எஸ் சிறிதும் தயக்கமுமின்றி பகிரங்கமாகவே இறங்கிவிட்டது.

புதிய தேசியக் கல்விக் கொள்கை என்ற ஆயுதம்மூலம் கல்வித் துறையை காவிமயமாக்கிட, சமஸ்கிருதமயமாக்கிட, இந்துத்துவமயமாக்கிட தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராணுவப் பள்ளியை ஆர்எஸ்எஸ் நடத்துவதா?

ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விப் பிரிவின் சார்பாக ராணுவப் பள்ளி உத்தரப்பிரதேசத்தில் 40 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படுகிறது. அதில் மாணவர்களைச் சேர்த்துப் பயிற்சி கொடுத்து, அவர்களை ராணுவ அதிகாரிகளாக அக்கல்லூரி  உருவாக்கித் தரும்.  அந்தப் பள்ளிக்கு ராஜூ பையா என்று பெயர் சூட்டப்பட உள்ளது. ராஜூ பையா என்பவர் ஆர்எஸ்எஸ் இன் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது).  

இதற்குரிய இடம் தந்தவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அலேகோயல் என்பவர். இப்பள்ளியில் ஆண்டுக்கு 1,120 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதில் முன்னாள் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் பிள்ளைகளுக்கு 56 இடங்கள் ஒதுக்கப்படும். 

இத்துடன் ஆர்எஸ்எஸ் வித்தியா பாரதி அமைப்பினால் தங்கிப் படிக்கும்  ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஒரு ஆர்எஸ்எஸ் பள்ளி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் தொடங்கி நடத்தப்படும். அதிலிருந்து இந்த ராணுவப் பள்ளிக்கு மாணவர்களைச் சேர்க்க அது ஒரு வாய்க்காலாக வழிவகுக்கவே இப்பள்ளி.

இந்துத்துவா கொள்கையின் செயல் வடிவத்திற்கு முதல் படி ஆர்எஸ்எஸ் இன் ராணுவப் பள்ளி ஏற்பாடு.

தனியார் கல்வி அமைப்புகள் நடத்தலாம் என்று விளம்பரம் செய்து, நாட்டின் எல்லா திசைகளிலும் பரவலாக 10 சைனிக் பள்ளிகளை ஏற்படுத்தலாமே! ஏன் அதனை உத்தரப்பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு மட்டும் தர வேண்டும்?

எதிர்க்கட்சிகளும், நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் இவைகளில் அக்கறையும், கவலையும் உள்ளவர்களும் ராணுவம் உள்பட சர்வமும் காவிமயமாக்கப்படுகிறது என்பதை மக்களிடம் விளக்கி, புரிய வைக்க வேண்டும்", என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x