நதிநீர் இணைப்புக்காக ஒற்றைத் தீர்ப்பாயம்: விஜயகாந்த் வரவேற்பு

விஜயகாந்த்: கோப்புப்படம்
விஜயகாந்த்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

நதிநீர் இணைப்புக்காக ஒற்றைத் தீர்ப்பாயம் மசோதாவை வரவேற்பதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா முழுவதும் நதிநீர் இணைப்புக்காக நேற்று நாடாளுமன்றத்தில் ஒற்றைத் தீர்ப்பாயம் மசோதாவை நிறைவேற்றம் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு நதிநீர் இணைப்பு மட்டுமே.

இந்தியா மிகச்சிறந்த ஒரு விவசாயநாடு, இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களும் விவசாயத்தை நம்பி தான் உள்ளது. இன்றைக்கு நீர் என்பது மிக, மிக அத்தியாவசியமான ஒன்றாக அனைத்து மக்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீருக்கும், விவசாயத்திற்கும்,தொழிலுக்கும் அனைத்து தேவைகளுக்கும் தீர்வு கண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தண்ணீரில் தன்னிறைவு பெறவேண்டும். அதற்கு ஒற்றைத் தீர்ப்பாயம் என்ற மசோதா வரவேற்கத்தக்கது.

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது என்று விட்டுவிடாமல், இந்தியாவில் உள்ள நதிகளை ஒன்றாக இணைத்து, அனைத்து மாநிலங்களுக்கும் தண்ணீர் தங்குதடையில்லாமல் கிடைக்க செய்ய வேண்டும். மேலும் மிக முக்கியமாக தமிழ்நாட்டிற்கு காவிரி, கோதாவரி இணைப்பு உடனடியாக செயல்படுத்தி, காவிரி கடைமடை வரை தண்ணீர் சென்றடைய இந்த நதி நீர் இணைப்பு மிக மிக அவசியம். அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் இன்றைக்கு பல பகுதிகளில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படக்கூடிய சிரமமான சூழ்நிலையை நாம் பார்க்க முடிகிறது.

எனவே இதை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தி மழைக்காலங்களில் வரும் பெருவெள்ளம் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுத்து, மழைநீரை சேமித்து வைத்தாலே தமிழகம் செழிக்கும். அதேபோல் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை பகிர்ந்து அளிக்க கூடிய அளவு நதிகளை இணைத்து, அதன் மூலம் ஆறுகள், ஏரி, குளம், குட்டை எல்லாவற்றிலும் நீர்நிலைகளை உயர்த்துவதற்கு நதிநீர் இணைப்பு மிக அவசியம். நதிநீர் இணைப்புக்காக ஒற்றைத் தீர்ப்பாயம் மசோதாவை தேமுதிக சார்பாக வரவேற்கிறேன்", என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in