

சென்னை
7 வயது சிறுவனின் தாடையில் வளர்ந்திருந்த 526 பற்களை சென்னை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கினர்.
சென்னையை சேர்ந்த 7 வயது சிறுவன், தன் மூன்று வயதிலிருந்தே வலது கீழ் பல்தாடையில் வீக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிறுவனுக்கு அப்பிரச்சினை சரியாகவில்லை. நாளடைவில், கீழ் பல்தாடையில் வீக்கம் அதிகரித்துள்ளது. மேலும், அப்பக்கத்தில் சிறுவனின் 7 வயது வரை நிரந்தர பற்களும் வளராமல் இருந்துள்ளன.
இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் அவரை சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்கு எக்ஸ்ரே மற்றும் சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், சிறுவனின் பல் தாடையில், சிறிய மற்றும் பெரிய அளவிலான 526 பற்கள் வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால், சிறுவனுக்கு நிரந்தரமான பற்கள் வளராமல் இருந்ததும் மருத்துவப் பரிசோதனை மூலம் தெரியவந்தது. இதையடுத்து, தாடையை நீக்காமலேயே சிறுவனின் பற்களை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். சிறுவனுக்கு அறுவைசிகிச்சை மூலம் தாடைக்குள் வளர்ந்திருந்த 526 ஒழுங்கற்ற பற்கள் அகற்றப்பட்டன.
அப்பற்கள் மொத்தமாக 200 கிராம் எடை கொண்டிருந்தன என மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அச்சிறுவன் நலமாக உள்ளார். ஒருவரின் வாயில் இத்தனை பற்கள் இருந்தது உலகிலேயே இதுதான் முதன்முறை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மும்பை அரசு மருத்துவமனையில், 17 வயது சிறுவனின் வலது மேல் தாடையில் இருந்த 232 பற்கள் நீக்கப்பட்டதே இதுவரை அதிகபட்சமான எண்ணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.