

கோவையில் கடந்த 2010- ல் பள்ளிக் குழந்தைகள் இரண்டு பேர் கடத்தி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் , கோவை மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்குதண்டனையை உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம்.
கடந்த 2010 ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி முஸ்கான், சிறுவன் ரித்திக் ஆகியோர், வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ் மற்றும் கூட்டாளி மனோகரன் என்பவர்களால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டது. தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையானது உறுதி செய்யப்பட்டது.
கொல்லப்பட்ட சிறுமிக்கும், சிறுவனுக்கும் தெரிந்த மோகன்ராஜூம், மனோகரும் இருவரையும் கடத்திச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும்போது சிறுவன் கூச்சலிட்டதால் கொன்றனர். பின்னர் சிறுமியையும் கொன்றனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற மோகன்ராஜ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் 2012 நவம்பர் 1 ம் தேதி மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோகரன் மேல்முறையீடு செய்தார், ஆனால் உயர் நீதிமன்றம் மனோகரனின் தண்டனையை கடந்த 2014-ல் உறுதி செய்தது. அதை எதிர்த்து மனோகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கை நீதிபதி ரோகின்டன் ஃபாலி நரிமன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் யோகேஷ் கன்னா, ‘‘இரு குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் இந்த கொலையை மறைக்கவும், பாலியல் வன்கொடுமை தடயத்தை திட்டமிட்டு அழிக்க முயன்றுள்ளனர். எனவே இவரின் இந்த கொடூரச் செயலுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிச் செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.
இந்த வழக்கு மீதான தீர்ப்பு கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.