ஆவின் பால் பாக்கெட் காலி கவர்களை முகவர்களிடம் கொடுத்து பணம் பெறலாம்: ஆவின் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை

பொதுமக்கள் ஆவின் பால் பாக்கெட் காலி கவர்களை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என, ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும், மறுசுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு இந்தாண்டு  தடை விதித்து அரசாணை வெளியிட்டது. இந்த தடை, கடந்த ஜனவரி மாதம் முதல் அமலில் உள்ளது. 

ஆனால், பால் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கும், மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்த தமிழக அரசு விலக்கு அளித்தது. இதில், ஆவின் பால் பாக்கெட்டுகள் மறுசுழற்சிக்கு உகந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. காலி கவர்களை குப்பைகளில், கால்வாய்களில் வீசுவதால் அது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது, நீரோட்டத்தை தடுக்கிறது. இதைத்தவிர்க்க ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஆவின் பாலினை வாங்கும் வாடிக்கையாளர்கள், ஆவின் பால் பாக்கெட் காலி கவர்களை சில்லறை வணிகர்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், முகவர்கள், அதிநவீன பாலகங்கள், வட்டார அலுவலகங்கள், மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் கொடுத்து, ஒரு காலி பாக்கெட் கவர் ஒன்றுக்கு 10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த கூடுதல் தகவல்களைப் பெற தொலைபேசி எண்களையும், ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ஆவின் நிறுவனத்தைப் போன்று, தனியார் நிறுவனங்களும் காலி பால் பாக்கெட் கவர்களை பொதுமக்களிடமிருந்து வாங்க வேண்டும் என்றும் ஆவின் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in