Published : 01 Aug 2019 09:54 AM
Last Updated : 01 Aug 2019 09:54 AM

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் 4 ஆண்டுகளாக முத்தடுப்பு மருந்து உற்பத்தி நிறுத்தம்

ஆர்.டி.சிவசங்கர்

குன்னூர்

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் முத்தடுப்பு மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதால், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி, கக்குவான் இருமல் ஆகிய நோய்களுக்கான மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘டிப்தீரியா’ எனப்படும் தொண்டை அடைப்பான் நோய், பெரும்பாலும் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களைத் தாக்கக் கூடியதாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, பாக்டீரியா தொற்று மூலம் இந்நோய் பாதிப்பு ஏற்படும். தொண்டை வலி, தொடர் இருமல், கழுத்துப் பகுதி வீக்கம், சுவாச அடைப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் 10-க்கும் மேற்பட்டோர் தொண்டை அடைப்பான் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் இரு சிறாருக்கு தொண்டை அடைப்பான் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் அந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமல் ஆகிய நோய்களுக்கான முத்தடுப்பு மருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இங்கிருந்து மாநிலம் முழுவதும் முத்தடுப்பு மருந்து அனுப்பப்பட்டு வந்தது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் முத்தடுப்பு மருந்து உற்பத்தி இந்த ஆய்வகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ஓர் ஆய்வகத்திலும், முத்தடுப்பு மருந்துகள் போதிய அளவில் உற்பத்தி செய்யப்படாததால், நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இது குறித்து பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் எஸ்.சிவகுமாரிடம் கேட்டபோது, ‘‘பாஸ்டியர் ஆய்வகத் தில் முத்தடுப்பு மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. புதிய புராஜெக்ட் மூலம் சோதனை முறை யில் தடுப்பூசிகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சோதனைக்குப்பின், மத்திய அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு, மருந்துகளின் தரக் கட்டுபாட்டுச் சான்றிதழ் கிடைத்த பின்னரே வணிக ரீதியாக மீண்டும் உற்பத்தி தொடங்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x