

மதுரை மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நடைபாதை இருப்பது போல் பூங்காவில் சைக்கிள் பயிற்சி செல்பவர்களுக்கு தனிப்பாதை அமைப்படுகிறது. அவர்கள் ‘சைக்கிளிங்’ செல்ல வாடகைக்கு சைக்கிள்களை விடவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மதுரை சுற்றுச்சூழல் பூங்காவில் தினமும் காலை நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் நடைப்பயிற்சி செல்வார்கள். காலையில் ‘வாக்கிங்’ செல்ல இலவசமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாலை நேரத்தில் பூங்காவில் பொழுதுபோக்க கட்டணம் அடிப்படையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். காலையில் வாக்கிங் செல்வோர் உடல் ஆரோக்கியத்திற்காக மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் யோகா, தியானம், உடற்பயிற்சி உபகரணங்கள் வைத்துள்ளனர்.
தற்போது சைக்கிளிங் பயிற்சி செல்வதற்காக தனிப்பாதை சுற்றுச்சூழல் பூங்காவில் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக நேற்று மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சுற்றுச்சூழல் பூங்காவை ஆய்வு செய்தார்.
அப்போது சைக்கிளிங் பயிற்சி செல்வதற்கு தனிப்பாதை அமைக்க ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் குறிப்பிட்ட சில சாலைகளில் மோட்டார் வாகனப் பயன்பாட்டை குறைக்க சைக்கிள் பாதை அமைக்கப்படுகிறது. அதுபோல், மதுரை மாநகராட்சியிலும் சாலைகளில் சைக்கிள் பாதை அமைப்பதற்கு முன்னோட்டமாக சுற்றுச்சூழல் பூங்காவில் பரிசோதனை முறையில் சுற்றுச்சூழல் பூங்காவில் வாக்கிங் வருவோர் சைக்கிளிங் செல்வதற்கு சுற்றுவட்டபாதையில் சைக்கிள் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பயன்பாட்டை பொறுத்து முக்கிய குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ள மாநகராட்சி சாலைகளில் சைக்கிள் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பூங்காவில் சைக்கிள் பாதை அமைத்ததும், அதில் சைக்கிளிங் சென்று உடற்பயிற்சி செய்ய 10 சைக்கிள்கள் பூங்காவிலே கட்டணம் அடிப்படையில் வாடகைக்குவிட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.