Published : 01 Aug 2019 09:40 AM
Last Updated : 01 Aug 2019 09:40 AM

தடகளப் போட்டியில் தங்கம்!- சர்வதேச அளவில் சாதிக்கும் கோவை வீரர்

த.சத்தியசீலன்

சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில்,  மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் கோவையைச் சேர்ந்த முகமது சலாஹூதீன்(25). சர்வதேச தடகள சங்கம் சார்பில் 29-வது சர்வதேச தடகளப் போட்டி 
கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்றது. இதில், இந்தியா, இலங்கை, கஜகஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், தஜிகிஸ்தான், அயர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்திய அணி சார்பில், கோவையைச் சேர்ந்த, மத்திய சுங்கத் துறையில் பணியாற்றும் தடகள வீரர் முகமது சலாஹூதீன், ஆண்கள் பிரிவு  மும்முறை தாண்டுதல் போட்டியில் 16.64 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல, கிரிக்ஸ்தான் நாட்டில் நடைபெற்ற 12-வது சர்வதேசப் போட்டியில்,  16.53 மீட்டர் தாண்டி, தங்கம் வென்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி, பஞ்சாப்பில் நடைபெற்ற, தேசிய கிராண்ட் பிரிக்ஸ் தடகளப்போட்டியிலும் தங்கப் பதக்கங்களை  வென்றார். இதையடுத்து, சர்வதேசப்  போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார்.

2018-ல் புவனேஸ்வர், அசாமில் நடைபெற்ற, தேசிய அளவிலான  தடகளப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தேசிய அளவில் சுங்கத் துறை ஊழியர்களுக்கு இடையிலான  தடகளப் போட்டியிலும் தங்கம் வென்றார். 2016-ல் சுங்கத் துறை ஊழியர்களுக்கான தேசிய தடகளப் போட்டியில், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்றார்.
அதே ஆண்டு மங்களூருவில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். முகமது சலாஹூதீனை சந்தித்தோம்.

“சொந்த ஊர் ஈரோடு என்றாலும், தற்போது கோவைப்புதூரில் வசித்து வருகிறோம். பெற்றோர் முகமது நிஜாமுதீன்- முஜிதாபேகம். இருவருமே சர்வதேச தடகள வீரர்கள். ஆசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்றுள்ளனர். தற்போது இருவரும்  கோவையில் ரயில்வேயில் அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.  தங்கை சாலிஹா பேகமும், தடகள வீராங்கனை.

விளையாட்டுப் பாரம்பரியம் என்பதால், சிறு வயதிலேயே எனக்கும் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.எனது விருப்பத்தைப் புரிந்துகொண்டு, அப்பாவே பயிற்சி அளிக்க முன்வந்தார். விளையாட்டில் நான் சாம்பியனாக வேண்டுமென்று கூறியபோது, ‘நீ சாம்பியனாக வேண்டுமென்றால் சில விஷயங்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். நண்பர்கள், பொழுதுபோக்கு போன்றவற்றை இழக்க நேரிடும். துறவியைப்போல வாழ வேண்டியிருக்கும்’ என்றார். அப்போது தொடங்கிய தடகளப் பயணம், வெற்றிப் பாதையில் பயணித்தது.

எனது 15-வது வயதில், கோவையில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில், மும்முறை தாண்டுதலில் தங்கம் வென்றேன். இது எனக்கு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் அளித்தது. இதைதொடர்ந்து, சிங்கப்பூரில் நடைபெற்ற முதலாவது ஆசிய இளையோர் தடகளப் போட்டியில்  நான்காமிடம் வென்றேன்.

திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, 100, 200 மீட்டர் ஓட்டங்கள், நீளம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்றேன். தொடர்ந்து, மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கம் வென்றேன்.பெற்றோர்  பணி இடமாறுதல் காரணமாக  கோவைக்கு வந்து, பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரியில் படித்தேன். விளையாட்டு இடஒதுக்கீட்டில் பி.எஸ்சி. ஐ.டி. மற்றும் எம்.ஐ.பி. படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பு எனது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ச்சியாக அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில், பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்று 5 ஆண்டுகளும் பதக்கம் வென்றேன்.
மேலும், உலக பல்கலைக்கழக தடகளப் போட்டிக்குத் தேர்வானேன். பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் இப்போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமை எனக்கு கிடைத்தது. தற்போது கோவையில் உள்ள மத்திய சுங்கத் துறை அலுவலகத்தில்  உதவி வரி அலுவலராகப் பணிபுரிந்து வருகிறேன்.

வரும் செப்டம்பரில் கத்தார் நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச தடகளப் போட்டியிலும், 2020-ல் ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கும் வகையில், திருவனந்தபுரத்தில் உள்ள தேசிய தடகளப் பயிற்சி மையத்தில்  தற்போது பயிற்சி மேற்கொண்டுள்ளேன். இந்தப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவேன் என்று நம்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்”  என்றார் நம்பிக்கையுடன் முகமது சலாஹூதீன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x