Published : 01 Aug 2019 09:37 AM
Last Updated : 01 Aug 2019 09:37 AM

ஒலிம்பிக் கனவு!- `அர்ஜுனா, துரோணாச்சார்யா’ விருதுகள் வென்ற ஜி.இ.ஸ்ரீதரன்

ஆர்.கிருஷ்ணகுமார் 

இந்திய வாலிபால் அணியை ஒலிம்பிக்கில் பங்கேற்கச் செய்ய வேண்டும்” என்கிறார் ஜி.இ.ஸ்ரீதரன்(65). வாலிபால் விளையாட்டில் நாட்டிலேயே 3 பேர் மட்டும்தான் விளையாட்டு வீரர்களுக்கான `அர்ஜுனா’ விருதையும்,  பயிற்சியாளர்களுக்கான `துரோணாச்சார்யா’ விருதையும் பெற்றுள்ளனர். அந்த 3 பேரில் ஒருவர்ஸ்ரீதரன். தவிர, தமிழகத்தில் இவ்விரு விருதுகளையும் பெற்றவர் இவர் மட்டும்தான். வாலிபால் பயிற்சி அளிப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கும் பறந்துகொண்டிருக்கும் ஸ்ரீதரனை, கோவையில் சந்தித்தோம்.

“பூர்வீகம் காஞ்சிபுரம் அருகேயுள்ள பெருங்காட்டூர். பெற்றோர் ராமச்சந்திரன்-செல்லம்மாள். அப்பா ராணுவத்தில் சேவையாற்றிய பின்னர், அஞ்சல் துறையில் பணிபுரிந்தார். அம்மாவின் அப்பா சேஷாச்சாரியார், பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது 
எம்.எல்.சி.யாக இருந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன். அந்தப் பள்ளியில் தமிழ் மீடியம் இருந்ததால், நான் தமிழ் வழியிலேயே பயின்றேன்.

பள்ளியில் படித்தபோதே எனக்கு கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு. 1964-ல் நடைபெற்ற, அகில இந்திய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் பங்கேற்றேன். 1970-ல் சீனியர் நேஷனல்ஸ் போட்டியில் ஹைதராபாத்துக்காக  விளையாடினேன்.

குவித்த வெற்றிகள்!

1971-ல் சென்னை பாரத ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்து, 1990-ம் ஆண்டு வரை பணிபுரிந்தேன்.  தமிழ்நாடு வாலிபால் அணிக்காக பலமுறை விளையாடி,பல்வேறு வெற்றிகளைப் பெற்றேன். 1977-ல் இருந்து இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கினேன்.
1978-ல் ஆசியப் போட்டியில் பங்கேற்றேன். 

அதேபோல, 1982-ல் டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்தேன். 1986-ல் தென்கொரிய நாட்டின் தலைநகரம் சியோலில் நடைபெற்ற, ஆசிய அளவிலான போட்டியில், நான் இடம் பெற்ற இந்திய அணி வெண்கலம் வென்றது.

1981-ல் எனது தலைமையிலான இந்திய வாலிபால் அணி, லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று, வெண்கலப் பதக்கம் வென்றது. அதேபோல, தெற்காசியப் போட்டியில் இந்திய அணி 2 முறை தங்கப்பதக்கம் வென்றது. 
1982-ல் மத்திய அரசு `அர்ஜுனா’ விருதும், மாநில அரசு ‘மாமல்லன்’ விருதும் வழங்கி கௌரவித்தது. இதற்கிடையில், 
பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து ரயில்வே துறைக்கு  மாறினேன். 

உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனத்திலும் பணிபுரிந்தேன். ஐந்து ஆண்டுகள் இத்தாலியில் தொழில் முறை விளையாட்டு வீரராக இருந்தேன். 1988-ல் திருமணம் நடைபெற்றது. மனைவி லதா, கோவையைச் சேர்ந்தவர். 1994 முதல்  கோவைவாசியாகிவிட்டேன். 1991-ல் ‘டிப்ளமோ இன் கோச்’ படிப்பு முடித்துவிட்டு, இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணிக்குச் சேர்ந்தேன். ஹைதராபாத்தில் பணிபுரிந்த பின்னர், கோவைக்கு பணி மாறுதலாகி வந்தேன். 2014-ம் ஆண்டு வரை கோவையில் பணியாற்றி, பின்னர் ஓய்வு பெற்றேன். 2007-ல் மிகச் சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான ‘துரோணாச்சார்யா’ விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது.

ஸ்ரீராம் வாலிபால் அகாடமி!

2012-ல் நானும், நண்பர் ராமலிங்கமும் இணைந்து ‘ராம் வாலிபால் அகாடமி’யை உருவாக்கினோம். முதலில் கிருஷ்ணா கல்லூரியிலும், தற்போது ரத்தினம் கல்லூரியிலும் அகாடமி இயங்கி வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக வாலிபால் பயிற்சி அளித்துள்ளோம். அகாடமியில் பயிற்சி பெற்ற 56 பேர் வெவ்வேறு பணிகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அதேபோல, 20 பேர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர். தற்போது 18 பேருக்கு இலவசமாக கல்வியுடன், பயிற்சி அளித்து வருகிறோம்.

இலவசப் பயிற்சி...

190 செ.மீ. உயரத்துக்கு மேல் இருந்து, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, வாலிபால் விளையாட்டில் ஆர்வம் இருப்பவர்களுக்கு, முற்றிலும் இலவசமாக பயிற்சி அளிப்பதுடன், பட்டப் படிப்பு பயிலவும் உதவுகிறோம். சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு அவர்களை தயார் செய்கிறோம். எங்கள் அகாடமியில் பயிற்சி பெற்ற பெரும்பாலான மாணவர்கள், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

தினக்கூலியாக இருந்தவரின் மகன் பவித்திரன், தற்போது அகமதாபாத்தில் வருமான வரித்துறையில் அதிகாரியாகவும், சமீன் என்பவர் கோழிக்கோட்டில் சுங்கத் துறையிலும், வைஷ்ணவ் சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் பணிபுரிகின்றனர்.
இந்திய அணிக்கு 39-வது இடம் தற்போது இந்திய ஆண்கள் கூடைப்பந்து அணி பயிற்சியாளராகப் பொறுப்பு வகிக்கிறேன்.உலகில் உள்ள நாடுகளில் 221 நாடுகளில்  வாலிபால் விளையாடப்படுகிறது. ஆசிய அளவில் மட்டும் 65 நாடுகள் விளையாடுகின்றன. உலக அளவில் பிரேசில், ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளும், ஆசிய அளவில் சீனா, ஜப்பான், கொரியா, ஈரான் உள்ளிட்ட  நாடுகளும் வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றன. இந்திய அணி 39-வது இடத்தில் உள்ளது.

இதுவரை ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி விளையாடவில்லை. வரும் 2024-ம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தைச் சேர்ந்த பல வீரர்கள் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு தேசிய வாலிபால் சம்மேளனம் தொழில்முறை லீக் போட்டியை நடத்தியது. இதுபோன்ற முயற்சிகள் வாலிபால் விளையாட்டை பெரிதும் ஊக்குவிக்கும். மத்திய, மாநில அரசுகளும் வாலிபால் விளையாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கி, வீரர்களை 
ஊக்குவிக்க வேண்டும்.  கோவை மாவட்ட வாலிபால் கழகம் சிறப்பாக செயல்பட்டு, மாணவர்களை ஊக்குவிக்கிறது. 
கோவையில் வாலிபால் விளையாட்டுக்காக பெரிய அளவிலான   அகாடமியை உருவாக்க வேண்டும்
என்பதே எனது லட்சியம். 

எனது மகன் அபிநய், தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் பங்கேற்றுள்ளார். மனைவி லதாவும், வாலிபால் வீராங்கனைதான். இந்தியா, சூடான், எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாட்டினருக்கும் வாலிபால் பயிற்சி அளித்துள்ளேன். எனது குடும்பத்தாரின் ஒத்துழைப்பே, வாலிபால் விளையாட்டிலும் சரி, பயிற்சியிலும் சரி, சாதனைபடைக்க உதவியது” என்றார் பெருமையுடன் ஸ்ரீதரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x