Published : 01 Aug 2019 06:38 AM
Last Updated : 01 Aug 2019 06:38 AM

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம், ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்

ராமேசுவரம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடல் மற்றும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கானோர் அக்னி தீர்த்தக் கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர். இதற்காக செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்தே தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திராவில் இருந்து ஏராளமானோர் ராமேசுவரம் வரத் தொடங்கினர்.

ஆடி அமாவாசையையொட்டி, ராமநாதசுவாமி கோயிலில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப் பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடை பெற்றது. இதைத் தொடர்ந்து 11 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீராமர், சீதா மற்றும் லட்சுமணருடன் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடி, கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். இதுபோல சேதுகரை, தேவிப்பட்டினத்திலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இதேபோன்று, நேற்று காவிரி யாற்றின் படித்துறைகளில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள், மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப் பணம் கொடுத்து வழிபாடு நடத்தி னர்.

ரங்கம் அம்மா மண்டபம் படித்துறை உட்பட காவிரியாற்றின் கரையோரங்களில் ஆயிரக்கணக் கான மக்கள், மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடியதால் அம்மா படித்துறை மட்டுமின்றி ஏராளமானோர் ஆற்றுக்குள் மணலில் அமர்ந்தும் தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர், ஆற்றில் ஓடிய தண்ணீரில் தர்ப்பணம் செய்த பொருட்களை கரைத்துவிட்டு, பழைய ஆடைகளை களைந்து, புனித நீராடிவிட்டு கோயில்களுக்குச் சென்றனர்.

மாநகராட்சி நிர்வாகம் சார்பில் துப்புரவுப் பணியாளர்கள் அம்மா மண்டபத்தில் சேரும் வாழை இலை, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை உடனுக்குடன் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. பழைய ஆடைகளை போடுவதற்கு தொட்டிகள் அமைக்கப் பட்டிருந்தும் சிலரைத் தவிர பெரும்பாலானோர் ஆற்றிலேயே ஆடைகளை விட்டுச் சென்றனர்.

கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாரும், ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடிய நிலையில் முன்னெச்சரிக்கையாக தீயணைப்புத் துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x